காஞ்சிபுரம்: மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தில் மத்திய அரசு பாடத் திட்டத்தின் கீழ் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குத் தங்களது பிள்ளைகளைப் பெற்றோர் அழைத்து வந்து விட்டுச் சென்றனர். வகுப்புகள் தொடங்கிய சிறிது நேரத்தில் பள்ளியில் உள்ள அலுவலகத்திற்கு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் வழக்கம் போல் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அந்த வெடிகுண்டு சிறிது நேரத்தில் வெடித்து விடும் எனக் கூறப்பட்டிருந்தது.
இதனைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம், மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருந்து மோப்ப நாய் உதவியுடன் வந்து பள்ளி வளாகம் முழுவதும் தீவிரச் சோதனை மேற்கொண்டனர். வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவர்கள் அனைவரும் பள்ளியின் பின் பகுதியில் உள்ள மைதானத்திற்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த தகவலையடுத்து வீட்டிற்குச் சென்ற பெற்றோர் பலர், அலறி அடித்துக் கொண்டு வந்து தங்களது பிள்ளைகளைப் பதற்றத்துடன் அழைத்துச் சென்றனர். மேலும் மாணவர்கள் கொண்டு வந்த புத்தகப் பை ஏதும் பள்ளி நிர்வாகம் கொடுத்து அனுப்பவில்லை, புத்தகப் பைகள் அனைத்தும் பள்ளி வகுப்பறையிலேயே உள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மாணவர்களின் புத்தகப் பைகள், வாகனங்கள் என பல்வேறு இடங்களில் தீவிரச் சோதனை செய்து வருகின்றனர்.