தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்! - Bomb Threat at Chennai Airport - BOMB THREAT AT CHENNAI AIRPORT

Bomb Threat at Chennai Airport: சென்னையிலிருந்து புறப்படும் உள்நாட்டு விமானத்தில், பவுடர் வடிவிலான வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்த மிரட்டல் இ-மெயிலால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 10:44 AM IST

சென்னை: சமீப காலமாக பள்ளி, கல்லூரி, கோயில், விமான நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் உள்ள இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்ற மிரட்டல் இ-மெயில்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, சென்னை விமான நிலையத்திற்கு இதுபோன்ற மிரட்டல் அடிக்கடி வருகிறது. இதனால், சென்னை விமான நிலையத்தில் ஒருவித பதற்றம் நிலவிய வண்ணமே உள்ளது.

அந்த வகையில், சென்னையிலிருந்து புறப்படும் உள்நாட்டு விமானத்தில் பவுடர் வடிவில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அதை தீவிரவாத இயக்கம் ஒன்று செயல் படுத்துவதாகவும் கொல்கத்தா விமான நிலைய இணையதள முகவரிக்கு நேற்று ஒரு மர்ம இ-மெயில் வந்துள்ளது. பின்னர், இதுதொடர்பாக கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு அவசர தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் உடனடியாக உயர்மட்ட அதிகாரிகளின் அவசர ஆலோசனை பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் விமான நிலைய உயர் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள், விமானங்கள் பாதுகாப்பான பிரிவான பிசிஏஎஸ் அதிகாரிகள், விமான நிறுவனங்களின் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், உளவுப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், அக்கூட்டத்தில் சென்னையிலிருந்து புறப்படும் உள்நாட்டு விமானங்கள், குறிப்பாக மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட வட மாநிலங்களுக்குச் செல்லும் விமானங்களில் தீவிர சோதனை நடத்துவதோடு, அந்த விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளின் உடமைகளை வழக்கமான சோதனைகளை விடக் கூடுதலாக ஒரு சோதனையும் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, பயணிகள் தங்கள் உடைமைகளில் பவுடர் போன்ற பொருட்கள் எடுத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

அதோடு வழக்கம்போல் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களில் சந்தேகப்படும் வாகனங்களை நிறுத்தி மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்துவது விமான நிலைய வளாகத்திற்குள் நீண்ட நேரமாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை கண்காணித்து சோதிப்பது உள்ளிட்ட பல்வேறு சோதனைகளும் தீவிரப் படுத்தப்பட்டன.

மேலும், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனைகளில் ஈடுபட்டனர். ஆனால் இறுதிவரையில் ஆட்சேபகரமான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. அதன்பின், இது வழக்கமான வெடிகுண்டு புரளி தான் எனத் தெரிய வந்துள்ளது.

இந்த சோதனைகள் காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து மும்பை, டெல்லி, கொல்கத்தா, சிலிகுரி, சீரடி உள்ளிட்ட பல விமானங்கள் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாகச் சென்னையிலிருந்து தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. இச்சம்பவம் சென்னை விமான நிலையத்திலிருந்த பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அருப்புக்கோட்டையில் இரு சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது.. பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details