சென்னை:தமிழக அரசின் துறைகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 4 சதவீத இட ஒதுக்கீட்டில், ஒரு சதவீதம் பார்வையற்றவர்களுக்கு ஒதுக்க வேண்டும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்றவர்களுக்கு உடனடியாக ஆசிரியர்கள் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மூன்று நாட்களாக பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வள்ளுவர் கோட்டம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
பின்னர், அவர்களை கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைத்தனர். இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும், காவல்துறையினர் மாற்றுத்திறனாளிகளைக் கைது செய்து, அவர்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு பேருந்துகளில் அனுப்பி வைத்தனர்.