திருவாரூர்: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாகப்பட்டினத்திற்கு வருகை தந்தார். இந்நிலையில் திருவாரூர் நகரத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மகாத்மா காந்தியை இழிவுப்படுத்தி மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படும் 'மக்கள் விரோத ஆர்எஸ்எஸ் ஆர்.என்.ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு' என்று திருவாரூருக்கு வருகை தரும் ஆளுநரை விரட்டியடிக்க கருப்பு கொடிகளோடு வருக என்றும், மதச்சார்பற்ற அரசியல் இயக்கங்கள், திருவாரூர் மாவட்டம் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
குறிப்பாக, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் தமிழ்நாடு ஆளுநர் ரவியை கண்டித்து கருப்பு கொடிகளோடு வருக என போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
பின்னர், கருப்பு கொடிகளுடன் ஊர்வலமாக வந்த விசிக உள்ளிட்ட பல அரசியல் இயக்கங்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து நிறுத்தியதால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 300-க்கும் மேற்பட்ட போலீசார் திருவாரூரில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காவல்துறையினர் தடுத்ததால் சாலையில் அமர்ந்து ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகப்பட்டினம் எம்.பி., செல்வராஜ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நாகப்பட்டினம் எம்பி செல்வராஜ், "சொந்த மக்கள் ஆள வேண்டும், இந்திய நாட்டை அடிமைப்படுத்திய அன்னியர்கள் வெளியேற வேண்டும் என்று மகாத்மா காந்தி தலைமையில் அகிம்சை வழி போராட்டமும், ஆயுதம் தாங்கிய போராட்டம் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலும் நடைபெற்றது.