சென்னை: தேசியப் பெருங்கடல் தொழில்நுட்பக் கழகம் (NIOT) ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டம், வக்காடு மண்டல், பாமஞ்சி கிராமத்தில் உள்ள கடல் முகப்பில் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் நிலைநீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பம் சோதனை வசதியை அமைத்து, நவம்பர் 8-ஆம் தேதி பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறது.
இதன்மூலம் கப்பல்களுக்கு கடலில் இருந்து எடுக்கப்படும் நீர் சுத்திகரிக்கப்பட்டு, மீண்டும் கடலில் விடும்போது கடல் சூழல் மாறுபடுவதை தடுக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது. இதற்கிடையில், புதிதாகத் தொடங்கப்படவுள்ள ஆய்வகத்தை, தேசியப் பெருங்கடல் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் ஆய்வுசெய்து, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறத்துக் கேட்டறிந்தார்.

உலகளவில், கப்பல் போக்குவரத்து வாயிலாகவே 90 விழுக்காடு வர்த்தகம் நடைபெறுகிறது. கப்பலில் வர்த்தகம் நடைபெறும் போது ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பொருள்களை ஏற்றிச் செல்வதற்கு, கப்பலின் எடை குறிப்பிட்ட அளவிற்கு இருப்பது அவசியம். சரக்குகள் இல்லாத கப்பல்கள் எடை குறைவாக இருக்கும்.
இதனால் கப்பல்கள் கவிழ்ந்துவிடும் என்பதால், கடல்நீரை கப்பலின் தாழ்வாரத்தில் அமைக்கப்பட்டுள்ள டேங்கர்களில் கடல்நீரை சேமித்து, அதனை சரக்கு ஏற்றும் இடத்திற்கு சென்றப் பின்னர் கடலில் மீண்டும் வெளியேற்றி விடுவாார்கள். இது பலருக்கு தெரியாத புதுத் தகவலாக இருந்தாலும், இதில் சில சிக்கல்களும் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கடற்சூழல் மாறினால் என்ன நடக்கும்?

கடலில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் பல்வேறு சூழல்களில் உயிர் வாழும் தன்மை கொண்டதாகும். அதில் இருக்கும் வைரஸ், பேக்டீரியா, தாவர இனங்கள் என அனைத்தும் ஒரு கடல் பகுதி சூழலுக்கு தகுந்ததாக இருக்கும். ஆனால், நாம் ஒரு இடத்தில் இருந்து கடல்நீரை எடுத்து, வேறு இடத்தில் அப்படியே வெளியேற்றினால், என்ன நடக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்?
வேறு இடத்தில் வாழ்ந்த இந்த நுண்ணுயிர்கள், புதிய இடத்திற்கு இடம்பெயரும். இதன் காரணமாக கடல் சூழலில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். இதனாலேயே, சர்வதேச கடல் அமைப்பு கப்பலில் உள்ள கடல் நீரை சுத்திகரித்து (Ballast water treatment) வெளியேற்ற வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வரும் காலங்களில் இதற்கு இணங்கும் நாடுகளின் கப்பல்கள் மட்டுமே, எல்லை தாண்டிய வர்த்தகத்திற்கு அனுமதிக்கப்படும் என்கிறது நியாட் ஆய்வுக்குழு.
கடல் சூழலியல்
இது குறித்து தேசியப் பெருங்கடல் தொழில்நுட்பக் கழகத்தின், கடல் உயிரித் தொழில்நுட்பக்குழுவின் தலைவரும், அறிவியலறிஞருமான தரணி கோபால் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “பெருங்கடல் உயிர்களின் தொட்டிலாக விளங்கி வருகிறது. அங்கு உயிரினங்கள் 3. 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி, உயிர்களின் உறைவிடமாகவும் வளங்களின் மாபெரும் கருவூலமாகவும் இருந்து வருகிறது. பெருங்கடல்கள் காலங்காலமாக உணவு மற்றும் வளங்களை வழங்கியுள்ளன.”
“மேலும் உலகெங்கிலும் மனிதகுலத்தின் கலாச்சார, சமூக மற்றும் பொருளாதார பரிணாமத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவில் கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது நிலையான முன்னேற்றத்தையும், சமீபத்தில் அதிக வேகத்தையும் பெற்றுள்ளது. இந்த நிலையில், தேசியப் பெருங்கடல் தொழில்நுட்பக் கழகத்தின் கடல் உயிரித் தொழில்நுட்பக் குழுவானது, கடல்நீர் சுத்திகரிப்பு கருவியை பரிசோதனை செய்து சான்றளிக்கவும் திட்டமிட்டுள்ளது.”
நாம் அறியாத கடல் வாழ் உயிரினங்கள்

“கடல் மண்டலத்தில், பெரும்பாலான உயிரி-ஆக்கிரமிப்புகள் கடலில் செல்லும் கப்பல்களை நிலைப்படுத்தப் பயன்படுத்தப்படும் நிலை நீரால் கூறப்படுகிறது. கடல் நீர் வெளியேற்றத்தால் வைரஸ்கள், பாக்டீரியாக்கள், நுண்ணுயிரிகள், சிறிய முதுகெலும்பில்லாத உயிரினங்கள், முட்டைகள், நீர்க்கட்டிகள் மற்றும் பல்வேறு இனங்களின் நுண்புழுக்கள் புதிய வாழ்விடங்களுக்கு பரவுகின்றன. உயிர் படையெடுத்து பரப்புவதில் நிலை நீரின் தாக்கத்தின் ஈர்ப்பு விசையைக் கருத்தில் கொண்டு, சர்வதேச கடல்சார் அமைப்பு புதிய வாழ்விடத்திற்குச் செல்வதற்கு முன், தீங்கு விளைவிக்கும் உயிரியல் பொருட்களை அகற்ற, நிலைநீரைச் சுத்திகரிக்கும் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது,” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க |
இது தொடர்பாக நம்முடன் தகவல்களைப் பகிர்ந்த தேசியப் பெருங்கடல் தொழில்நுட்பக் கழகத்தின், கடல் உயிரித் தொழில்நுட்பக்குழுவின் தலைவரும், அறிவியலறிஞருமான வினித்குமார் (Marine Biotechnology), “2017 செப்டம்பர் முதல், நிலை நீர் மேலாண்மை மாநாடு நடைமுறைக்கு வருகிறது. தற்போதைய சூழலில், இந்தியப் பெருங்கடலின் இந்த மிக முக்கியமான பகுதியில் நில அடிப்படையிலான நிலைநீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பங்கள் சோதனை வசதி எதுவும் இல்லை.”
“தேசியப் பெருங்கடல் தொழில்நுட்பக் கழகம், ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டம், வக்காடு மண்டல், பாமஞ்சி கிராமத்தில் உள்ள கடல் முகப்பில் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் நிலைநீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பம் - சோதனை வசதியை நிறுவி உள்ளது. இதனை நவம்பர் 8-ஆம் தேதி செயல்பாட்டிற்கு கொண்டு வருகிறது,” என்று கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.