சென்னை: சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஜூலை 6ஆம் தேதி நடைபெறவுள்ள பாஜக செயற்குழு கூட்டத்தில் மத்திய வேளாண் அமைச்சர் சிவாரஜ் சிங் செளகான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும், இக்கூட்டத்தில் மொத்தம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக பாஜகவினர் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை இன்று (புதன்கிழமை) பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "2026ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திராவிட கட்சிகள் இல்லாத ஒரு வெற்றியை, தேசிய ஜனநாயக கூட்டணி பெறுவதற்கான ஒரு பிள்ளையார் சுழி போடுவதற்காக இந்த சிறப்பு செயற்குழு கூட்டம் இருக்கும்.
அத்துடன் போதைப்பொருள் மற்றும் கள்ளாசாரய மரணங்களில் இருந்து தமிழக மக்களை காக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் இந்த செயற்குழுவில் நிறைவேற்றப்படவுள்ளன. நீட் தேர்வு பற்றி கருத்து சொல்லும் விஜய் முதலில் மக்களை சந்திக்க வேண்டும். எதற்காக நீட் வேண்டாம் என்று பத்திரிகையாளர்கள் விஜயிடம் கேள்வி கேட்க வேண்டும்.