தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஒரு கண்ணில் வெண்ணெய்யும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பதுதான் திமுக" - வானதி சீனிவாசன் சாடல்! - Vanathi Srinivasan

Vanathi Srinivasan: வக்ஃப் வாரிய சட்டத்திருத்தத்தில் சொத்து தொடர்பாக வாரியத்திற்கும், அரசுக்கும், முஸ்லிம் அல்லாத நபர்களுக்கும்தான் பிரச்சினை வருகிறது. அதனால் அரசு அதிகாரிகளும் இடம்பெறும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது எனவும், இதன்மூலம் 'இண்டி' கூட்டணியின் இரட்டை நிலைப்பாட்டை மத்திய அரசு அம்பலப்படுத்தியுள்ளது எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

வானதி சீனிவாசன் அறிக்கை
வானதி சீனிவாசன் அறிக்கை (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 10, 2024, 7:47 AM IST

கோயம்புத்தூர்:பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "1947ஆம் ஆண்டில் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்து சென்ற முஸ்லிம்களின் நிலங்கள், முஸ்லிம் செல்வந்தர்கள் தானமாக அளித்த சொத்துகளை நிர்வகிக்க, கடந்த 1954ஆம் ஆண்டு வக்ஃப் சட்டம் இயற்றப்பட்டது.

மேலும், வக்ஃப் வாரியங்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் வகையில் 1995, 2013 ஆகிய ஆண்டுகளில் வக்ஃப் சட்டத்தில் காங்கிரஸ் அரசு திருத்தங்களை செய்தது. கடந்த 2022ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, முழுவதும் வக்ஃப் வாரியங்களுக்கு 7 லட்சத்து 80 லட்சத்துக்கும் மேற்பட்ட அசையா சொத்துகள், அதாவது 9 லட்சத்து 40 லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட வானளாவிய அதிகாரங்களால், ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்து கோயில்கள், ஒட்டுமொத்த கிராமங்களும் தங்கள் சொத்து என வக்ஃப் வாரியங்கள் வாதிடுகின்றன. இதனால் பல பத்து தலைமுறைகளை அனுபவித்து வரும் சொத்துகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், திருச்செந்துறை கிராமத்தில் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட சிவாலயம் உட்பட ஒட்டுமொத்த கிராமமும் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தம் எனக் கூறி, பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் திருச்செந்துறை மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில்தான் வக்ஃப் வாரிய சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்களை செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் இச்சட்டம் திருத்தம் மீதான விவாத்தில் பேசிய காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி கட்சியினர், முஸ்லிம் மத விவகாரத்தில் அரசு எப்படி தலையிடலாம்? வக்ஃப் சொத்து விவகாரத்தில் முஸ்லிம் அல்லாதவர் எப்படி இடம் பெறலாம் என அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பியுள்ளனர்.

இது வக்ஃப் வாரியம் முஸ்லிம் மத விவகாரம் சம்பந்தப்பட்டது அல்ல. மதம், வழிபாடு தொடர்பான எதையும் வக்ஃப் வாரியம் செய்வதில்லை. முஸ்லிம் சொத்துகளைத்தான் வக்ஃப் வாரியம் நிர்வகிக்கிறது. சொத்து தொடர்பாக வாரியத்திற்கும், அரசுக்கும், முஸ்லிம் அல்லாத நபர்களுக்கும்தான் பிரச்சினை வருகிறது. அதனால் அரசு அதிகாரிகளும் இடம்பெறும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. வக்ஃப் வாரிய சொத்துகளைப் பாதுகாக்கவும், திருச்செந்துறை போன்ற தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கவும்தான் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது.

ஆனால், இந்த விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 'இண்டி' கூட்டணிக் கட்சிகளின் இரட்டை நிலைப்பாடு அம்பலத்திற்கு வந்துள்ளது. முஸ்லிம் மத விவகாரத்தில் அரசு எப்படி தலையிடலாம் என்று கேட்பவர்கள், இந்து மத கோயில்களை மட்டும், மத நம்பிக்கையில்லாதவர்களைக் கொண்டு நிர்வகிக்கப்படுவதை நியாயப்படுத்துகிறார்கள். தமிழகத்தை ஆளும் திமுக இந்து மதத்தை மட்டும் வெறுக்கும் கட்சி. சனாதனத்தை அதாவது இந்து மதத்தை அழிக்க வேண்டும் என வெளிப்படையாகவே பேசும் கட்சி.

இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துச் சொல்லாத கட்சி. இப்படிப்பட்டவர்கள்தான் இந்து கோயில்களை கட்டுக்குள் வைத்து வழிபாடு உள்ளிட்ட அனைத்திலும் தலையிடுகின்றனர். ஆனால் திமுகவினர் நாடாளுமன்றத்தில் முஸ்லிம் மத விவகாரத்தில் அரசு எப்படி தலையிடலாம் எனக் கேட்கின்றனர்.

ஒரு கண்ணுக்கு வெண்ணெய்யும், ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைப்பதுதான் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 'இண்டி' கூட்டணிக் கட்சிகளின் வழக்கம். அதனால், பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு போராடியவர்களுக்கு, பங்களாதேஷ் இந்துக்களுக்காக ஒரு வார்த்தை சொல்லக் கூட மனமில்லை. திமுக உள்ளிட்ட 'இண்டி' கூட்டணிக் கட்சிகளின் இரட்டை நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை மக்கள் புரிந்து கொள்ள வக்ஃப் சட்டத் திருத்தம் ஒரு வாய்ப்பை தந்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: மேட்டுப்பாளையத்தில் விடிய விடிய திக்..திக்! - சார்பதிவாளர் சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details