அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக தவம் கிடப்பதாக கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார் தூத்துக்குடி:கோவில்பட்டி கிருஷ்ணன் நகரில் நேற்று (பிப்.29) அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "இன்னும் பத்து நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க, இந்த நிமிடம் வரை பாஜக தவம் கிடக்கிறது. கூட்டணி வைத்துக் கொள்வதற்காக ஆள் மேல் ஆள் அனுப்பி வருகிறார்கள். அதிமுக பலமாக இருப்பதால்தான் பாஜக நம்மைத் தேடி வருகிறது. இரண்டு கட்சிகள் திமுக கூட்டணியில் அதிருப்தியில் உள்ளன. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியைப் பொருத்தவரை, இந்த முறை அதிமுக தான் களமிறங்கும்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளரைப், பொதுச் செயலாளர் எடப்பாடி தேர்வு செய்துவிட்டார். பாஜக நம்மை தற்போது அட்டாக் பண்ணவில்லை. திமுகவை குழிதோண்டி புதைத்து விடுவேன் எனப் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். பிரதமர் இவ்வாறு இறங்கிப் பேசியது கிடையாது. அதற்கு ஏற்ப இங்கு ஒரு அமைச்சர், சீனா ராக்கெட் உடன் விளம்பரம் போட்டுள்ளார்.
குலசேகரப்பட்டினத்தில் 2 ஆயிரத்து 233 ஏக்கர் அளவில் இஸ்ரோவின் ராக்கெட் தளம் அமைக்கப்பட்டுள்ளது என்றால், அதற்கு முழுகாரணம் அதிமுக தான். நிலத்தினை கையகப்படுத்தி கொடுத்த ஆட்சி அதிமுக. இந்த திட்டத்திற்கு யாரும் உரிமைக் கொண்டாட முடியாது. கருணாநிதியின் கனவை நனவாக்கி விட்டதாகக் எம்.பி கனிமொழி கூறுகிறார். அவர்கள் கனவு கனவாகத் தான் இருக்கும். இதற்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை.
திமுகவை பாஜக விடாது. அதிமுகவின் ரூட் கிளியர் ஆகிவிட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைத் திமுக நிறுத்தி விட்டதை மக்களிடம் தெரிவித்தால் போதும், மோடியை மக்கள் பார்ப்பார்கள். ஆனால் ஓட்டாக மாறாது. தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் அதிகபட்சம் ஐந்து சதவிகித வாக்குகள் தான் கிடைக்கும். திராவிட கட்சிகள் இல்லாமல், தேசிய கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற முடியாது.
தூத்துக்குடி மாவட்டத்தைப் பொருத்தவரை அமைச்சர் என்றால் அது கனிமொழி எம்.பி. தான். அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் இருவருமே டம்மி அமைச்சர்கள். திமுக என்றைக்கும் மரபுகளைப் பின்பற்றியது இல்லை. தமிழகத்தில் இருக்கக்கூடிய அமைச்சர்களில் டம்மி அமைச்சர்கள் இருப்பது தூத்துக்குடி மாவட்டத்தில் தான். காரணம் எம்.பி கனிமொழி வாரிசு என்பதால். அவர் முதலமைச்சர் குடும்பத்திலிருந்து வந்தவர்.
திமுகவின் வாரிசு அரசியலுக்கு இது ஒரு உதாரணம். அதே போன்று தான் மரபுகளை மீறி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயல்பாடுகிறார். தேர்தல் களத்தில் அதிமுகவுக்கு சாதகமான அம்சம் உள்ளது. மக்கள் என்றைக்கும் விலை போக மாட்டார்கள். கடந்த தேர்தலில் பாஜக மேல் இருந்த வெறுப்பில் திமுக வெற்றி பெற்றது. தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என்ற நிலை தமிழகத்தில் உள்ளது.
பாஜக வளர்ந்து விட்டதாகக் கூறுகிறார்கள். அதை வரும் தேர்தலில் பார்ப்போம். அதிமுகவின் வளர்ச்சி இன்றைக்கு இமயமாக உயர்ந்துள்ளது. அத்தனைக் கட்சிகளும், கூட்டணிக்காக இன்னும் ஒரு வார காலத்திற்குள் அதிமுகவை தேடி வரும் நிலை உருவாகும். ஒரு அரசியல் மாற்றம் மற்றும் திருப்பம் ஏற்படும். வெற்றி அதிமுகவிற்குத் தான்" என்றார்.
இதையும் படிங்க:'தமிழ்நாடு போதைப்பொருள் மாநிலமாக திமுகவே காரணம்' - ஈபிஎஸ் கண்டனம்