தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஜயின் அரசியல் வருகை: லண்டனிலிருந்து சென்னை திரும்பிய அண்ணாமலை சொன்னது என்ன? - TVK

அன்றைக்கும் சொல்கிறேன், இன்றைக்கும் சொல்கிறேன் விஜய்யை நாங்கள் வரவேற்கிறோம். விஜயினுடைய பேச்சு திராவிட கொள்கையோடு ஒத்துப் போகிறது. அவரின் அரசியல் பயணம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று அண்ணமலை தெரிவித்தார்.

அண்ணாமலை, விஜய்
அண்ணாமலை, விஜய் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2024, 5:36 PM IST

சென்னை : மூன்று மாதம் அரசியல் புத்தாக்க படிப்பினை முடித்துவிட்டு இன்று சென்னை விமான நிலையம் திரும்பிய பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "மூன்று மாத காலம் எனக்கு புத்தாக்க பயிற்சி மேற்கொள்ள கட்சி அனுமதி வழங்கியது அதற்கு நன்றி. இந்த மூன்று மாத காலமும் எச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைத்து கட்சியின் உறுப்பினர் சேர்க்கை சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர்.

அண்ணாமலை பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

விரைவில் பாஜகவின் கிளைச் செயலாளர் முதல் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவிற்காக கடுமையாக உழைத்த நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, எச்.ராஜா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மூன்று மாத காலம் என்னை நானே வடிவமைத்து கொள்வதற்கு உதவியது. என்னிடமும் சில குறைகள் இருக்கிறது. அதனை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பதை எல்லாம் ஆய்ந்து அறிய முடிந்தது. நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு, ஒரு பெரிய உச்சத்தில் இருந்து நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அன்றைக்கும் சொல்கிறேன், இன்றைக்கும் சொல்கிறேன் அவரை நாங்கள் வரவேற்கிறோம். அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு வந்திருக்கிறார்.

அதே நேரத்தில் தனது முதல் மாநாட்டில் பல்வேறு கருத்துக்களை முன் வைத்திருக்கிறார். அதற்கு நம்முடைய தலைவர்கள் பதில் அளித்து இருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போது அதற்கான கருத்துக்களை சொல்வேன்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பொறுத்த வரைக்கும், கட்சியின் ஒரு வேகமான வளர்ச்சியை அடைந்திருக்கிறார். சட்டமன்ற உறுப்பினரானார், அமைச்சரானார், தற்பொழுது துணை முதலமைச்சர் ஆகி இருக்கிறார்.

திமுக ஒரு குடும்பத்தைச் சார்ந்த இயங்குகிறது என்பதை நாங்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டு முன்வைத்து வருகிறோம். வெளியிலிருந்து வரக்கூடிய திறமைகளை அவர்கள் ஏற்பதில்லை என்ற குற்றச்சாட்டு இன்றைக்கு உண்மையாகி இருக்கிறது.

துணை முதலமைச்சராக உதயநிதி செயல்பாடுகளை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம். எங்கே விமர்சிக்க வேண்டுமோ, அங்கு விமர்சனம் செய்வோம். எங்கு வரவேற்க வேண்டுமோ, அங்கே வரவேற்போம். ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் ஒரு சரித்திர வெற்றியை பாஜக பெற்றிருக்கிறது. அகில இந்திய அளவில் எல்லா மாநிலங்களிலும் முதன்மையான கட்சியாக பாஜக வளர்ந்து இருக்கிறது.

விஜய்யிடம் புதிதாக எதுவும் இல்லை; திராவிட கட்சிகள் பேசும் சித்தாந்தத்தை தான் நடிகர் விஜய்யும் பேசியுள்ளார். விஜயினுடைய பேச்சு திராவிட கொள்கையோடு ஒத்துப் போகிறது. அவரின் அரசியல் பயணம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆனால் எங்கள் பாதத்தை நாங்கள் வலுவாக பதித்து இருக்கிறோம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. திரைப்படங்களில் நடித்து உச்சம் பெற்றிருக்கலாம். ஆனால் விஜய் அவர்கள் எத்தனை முறை தினம், தினம் அரசியல் களத்திற்கு வந்துள்ளார். அக்டோபர் 28க்கு பிறகு அவர் வெளியே வந்தாரா? என கேள்வி எழுப்பினார்.

மேலும், அரசியலில் 365 நாட்களுக்கு இருக்க வேண்டும். வெற்றி, தோல்விகள் வந்துகொண்டே இருக்கும் அதற்கெல்லாம் விஜய் தன்னை எப்படி தயார்படுத்த போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

திராவிட கட்சிகளுக்கான வாக்கு வங்கி மூன்றாக பிரிந்துள்ளது. ஆனால் பாஜகவின் தேசிய வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த கேள்விக்கு, இந்திய அரசில் இரண்டு கட்சிகள் தான் வித்தியாசமான பாதையில் பயணிக்கிறார்கள் ஒன்று திமுக மற்றொன்று ஆம் ஆத்மி. ஒரு நிரபராதியை கொண்டாடுவதை போல அமைச்சர் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் கொண்டாடுவது ஆச்சரியமாக உள்ளது.

ஊழலோடு மலிந்திருக்கும் திமுக பெயிலில் வெளியே வந்து இருக்கும் மனிதரை, காந்தியாக காந்தியவாதியாக கொண்டாடுவது தமிழகத்திற்கு புதிது கிடையாது. எல்லாவற்றையும் மக்கள் பார்த்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

சீமானோடு கூட்டணியா என்ற கேள்விக்கு, சீமானுடைய பாதை தனி. எங்களுடைய பாதை தனி. அவர் பல்வேறு காலம் கட்டங்களில் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதனால் அவருடைய பாதை தனி எங்களுடைய பாதை தனி. 2026 சட்டமன்றத் தேர்தல் சரித்திர தேர்தலாக இருக்கும் " என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details