திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சேமலைக்கவுண்டன்பாளையத்தில் கடந்த 29ம் தேதி மர்ம நபர்களால் தெய்வசிகாமணி, அமலாத்தாள், செந்தில்குமார் ஆகிய 3 பேர் மர்ம நபர்களால் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் போலீசார் 14 பேர் கொண்ட தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்னும் ஒரு துப்புகூட கிடைக்காததால் போலீசார் திணறிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று பாஜக தலைவர் அண்ணாமலை, கொலை செய்யப்பட்ட செந்தில்குமாரின் மனைவி கவிதா மற்றும் அவரது உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கொங்கு பகுதியில் விவசாயம் சார்ந்த மக்கள் கடந்த 29ம் தேதி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளோம். தமிழக காவல் துறையோடு உள்ளோம்.
பாஜக சார்பில் அமித்ஷாவுக்கு கடிதம் எழுத உள்ளோம். அதில், இந்த வழக்கை காவல் துறையுடன் இணைந்து சிபிஐ விசாரிக்க வேண்டும். முதல்வரும் இதற்கு செவி சாய்க்க வேண்டும். ஏற்கனவே தோட்டத்தில் குடிக்க வேண்டாம் என சொன்னதற்கு 4 பேர் கொலை செய்யப்பட்டனர். இது முதலும், முடிவும் ஆக இருக்க வேண்டும்.
போதைக் கலாச்சாரத்தை பார்த்து ஒரு தலைமுறை வளர்கிறது. இவர்கள் கையில் ஆயுதம் சென்றால் அது அபாயம். முதல்வரும் புரிந்து கொண்டு சிபிஐக்கு அனுமதி வழங்க வேண்டும். உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றால் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை போய்விடும்.
குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு தண்டனை விரைவாக வழங்கப்படவேண்டும். எல்லோருக்கும் பயம் வரும் அளவுக்கு ஆயுதம் எடுக்க நினைப்பவர்களுக்கு முதலும் முடிவுமாக இருக்க வேண்டும். சிறந்த அதிகாரிகளை வரவழைத்து விசாரணை செய்திருக்கலாம். நாங்களும் உங்களோடு வருகிறோம். சேர்ந்து தீர்வு காணுவோம்.