திருப்பத்தூர்: தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டையில் நேற்று (ஜன.31) பாத யாத்திரையை மேற்கொண்டார். இதில் மாவட்ட, மாநில, ஒன்றிய, நகரப் பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கடந்த 10 ஆண்டுகளிலிருந்து இந்திய நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்தியா என்றால் ஊழல் நாடு என்று இருந்தது. கடந்த ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி ரூ.12 லட்சம் கோடி ஊழல் செய்தது.
காங்கிரஸ் கட்சியுடன் எல்லா கட்சியும் சேர்ந்து கூட்டுச் சேர்ந்து ஊழல் செய்தார்கள். ஊழலை ஒழிக்கக்கூடிய கட்சி வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கும் போது தான் நரேந்திர மோடி பிரதமர் ஆனார். கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை எந்த ஊழலும் நடைபெறவில்லை.
இந்தியா கூட்டணியை உருவாக்கிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தற்போது பாஜக கட்சியில் உள்ளார். மூன்றாவது முறையாக நரேந்திர மோடி தான் பிரதமர் ஆவார். பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. பல வருடங்களாகக் காஷ்மீர் மீது இருந்த தடையை நீக்கியது பாஜக தான். அயோத்தியில் ராமர் கோயில் கட்டியேத் தீருவோம் என்று முடிவு செய்து கோயில் கட்டப்பட்டது. கடந்த ஆட்சியில் கண்ட இடங்களில் குண்டு வெடித்தது. பாஜக ஆட்சிக்கு வந்த பின், தற்போது நாடு அமைதியாக உள்ளது.
இந்தியா பொருளாதாரத்தில் கடைசி நாடாக இருந்தது. பாஜக ஆட்சிக்குப் பின் இந்தியா பொருளாதாரத்தில் 5வது இடத்தில் உள்ளது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நமக்கான தேர்தல். தமிழ்நாட்டில் தற்போது குடும்ப அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. எல்லா அமைச்சர்களின் வாரிசுகள் தான் பதவிப் பொறுப்பு வகிக்கிறார்கள்.
குடும்பக் கட்சி எங்கேயும் கிடையாது தமிழ்நாட்டைத் தவிர, தமிழக அமைச்சர்கள் 11 பேர் மீது ஊழல் புகார் உள்ளது. அதில், அமைச்சர் செந்தில் பாலாஜி 8 மாதமாகச் சிறையில் உள்ளார். மற்றொரு அமைச்சருக்கும் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழக அமைச்சரவை இலக்கா இல்லாத அமைச்சரவையாகத் தான் இருக்கும். ஊழலற்ற ஆட்சி வேண்டுமானால் பாஜகவிற்கு வாக்களியுங்கள். பாஜக திமுகவைப் போல ஊழல் கட்சி இல்லை.