சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் 18ஆம் தேதி மாலை முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்படுகிறது. இந்த நிகழ்வில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரூ.100 மதிப்பில் கலைஞர் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்டோருக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடும் விழாவுக்கான அழைப்பிதழ் அனுப்பும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
அதே நேரத்தில், திமுக அரசை கடுமையாக விமர்சித்து வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ''முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு கால சாதனையாக ரூ.100 நாணயம் வெளியிட வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரியது. அதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கியது.
நாணயம் வெளியீட்டு விழாவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகிறார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னை தொலைபேசி மூலமாக அழைத்து, இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக் கொண்டார். பாஜகவைப் பொறுத்தவரை, இதனை நாங்கள் அரசியலாகப் பார்க்கவில்லை.