கோயம்புத்தூர்:தடையை மீறி பேரணி செல்ல முயன்றதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசர் உட்பட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர் தொடர்ந்து, கைது செய்து அனைவரையும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் விடுவித்துள்ளனர்.
கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில், முதல் குற்றவாளியாக தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தின் தலைவர் எஸ்ஏ பாஷா கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக, சிகிச்சைக்காக வந்த பாஷா கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி உயிரிழந்தார்.
இதனையடுத்து, அவரது உடல் கோவையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இவரது ஊர்வலத்துக்கு காவல் துறை அனுமதி அளித்ததற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தொடர்ந்து, அவரது இறுதி ஊர்வலத்துக்கு அனுமதியளித்த தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில், கருப்பு தின பேரணி நடத்தப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
பா.ஜ.க பேரணி:
அதன்படி, பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கருப்பு தின பேரணி நேற்று (டிசம்பர் 20) வெள்ளிக்கிழமை காந்திபுரம் பகுதியில் நடைபெற்றுள்ளது. இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்துள்ளார். இக்கூட்டத்தில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
பின்னர் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, “திமுக அரசு தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளது. முதலமைச்சர் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் பின்னணியாக, இஸ்லாமிய பயங்கரவாதிகள் செயல்பட்டனர். இவர்கள் கார் குண்டுவெடிப்பு நடத்துவதற்காக சத்தியமங்கலம் காட்டுக்குள் ஒன்று கூடி திட்டம் தீட்டியது என்ஐஏ-வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.