சென்னை:சென்னை தீவுத் திடலைச் சுற்றி ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை பார்முலா 4 கார் பந்தயம் நடத்த தமிழக விளையாட்டுத் துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்நிலையில், இப்பந்தயத்துக்கு தடை விதிக்கக்கோரி பா.ஜ.க சார்பில் ஏ.என்.எஸ் பிரசாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில், 'தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, மக்களின் மேம்பாட்டுக்கான திட்டங்களில் கவனம் செலுத்தாமல், பொழுதுபோக்கான கார் பந்தயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். இது தனியார் நிறுவனத்தை ஊக்குவிக்கும் செயலாகும். கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பார்முலா 4 பந்தயம் பாதுகாப்பாக மூடிய வளாகத்தில் நடத்தப்பட வேண்டிய கார் பந்தயம். திறந்தவெளியில் நடத்த கூடாது. ஏற்கனவே நடத்த திட்டமிடப்பட்டு புயல் பாதிப்பு காரணமாக இரண்டாவது முறையாக தற்போது மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பாக நடத்த வேண்டிய பந்தயத்தை சாலையில் நடத்துவது மோட்டார் வாகன விதியை மீறுவதாகும். பந்தயம் நடத்துவதற்கு முன் சாலையின் தரம் குறித்து அகில உலக வாகன கூட்டமைப்பின் அனுமதியை பெற வேண்டும். பந்தயம் நடக்கும் 3.7 கி.மீ சாலை மக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியாகும். போட்டி நடைபெறுவதால் மக்களுக்கு தேவையில்லாத சிரமம் ஏற்படும்.