திருநெல்வேலி: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று விமர்சையாக நடைபெற்றது. இதற்காக இந்தியா முழுவதிலும் இருந்து ராமர் பக்தர்கள், அரசியல் தலைவர்கள், பிரபல தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் வந்த வண்ணம் உள்ளனர். அயோத்திக்கு நேரில் செல்ல முடியாதவர்களின் வசதிக்காக, கும்பாபிஷேக விழாவை நாடு முழுவதும் நேரலை செய்ய விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பாஜகவினர் ஏற்பாடு செய்தனர்.
ஆனால், தமிழ்நாட்டின் கோயில்களில் சிறப்பு பூஜைகள் உள்பட ராமர் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பான எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை நேரலை செய்வதற்காக, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள திருமண மண்டபத்தில், விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பாஜக சார்பில் எல்இடி திரை அமைத்து, பொதுமக்கள் பார்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.