திருச்சி:திருச்சி கே.கே.நகர் பகுதியில் பாஜக சார்பாக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், "பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகும். நடைபெறவுள்ள நாடளுமன்ற தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றியை பெறும்.
இன்றை நாள் வரை திராவிட கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் பாஜக அமைத்துள்ள வலுவான கூட்டணியாகும். பிரதமர் மோடி இன்னும் பலமுறை தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளார். தமிழ்நாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்ட அரசு நிகழ்வுகள் மற்றும் கட்சி சார்ந்த நிகழ்வுகளில் தேவையற்ற வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஒன்று என நினைப்பவர்தான் மோடி. தமிழ்நாட்டில் தற்போது போதைப்பொருள் கலாச்சாரம் தலை தூக்கி உள்ளது இதற்கு முக்கிய காரணம் திமுக அரசு தான். திமுகவின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், அவருடன் நெருங்கிய நட்புறவில் இருந்த திமுக நிர்வாகிகள் குடும்பங்கள் அனைவரும் இந்த போதைப்பொருள் கலாச்சாரத்திற்கு உடந்தையாக உள்ளனர் என குற்றம் சாட்டினார்.