தஞ்சாவூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில், தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து, பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தஞ்சை கீழவாசல் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு, வாரிசு ( உதயநிதி ஸ்டாலின்) விளையாட்டுத் துறையைச் சரியாகக் கொடுத்துள்ளனர். விளையாட்டுத் தனமான அமைச்சருக்கு, விளையாட்டுத் துறையைத்தான் கொடுக்க வேண்டும். அவர் பிரதமர் மோடியை 29 பைசா என்று கூறுகிறார். நீங்கள் ஊரில் உள்ள குழந்தைகளுக்கு போதைப்பொருள் கொடுத்து அடுத்த தலைமுறையை வீணாக்கிக் கொண்டிருப்பவனை வைத்து சினிமா தயாரிக்கிறீர்கள். எனவே, உதயநிதியை டிரக் (Drug) உதயநிதி என்று தான் சொல்ல வேண்டும்.
பிரதமர் மோடி 29 பைசா என்று நீங்கள் கேவலப்படுத்தினால், நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றுக்கும் நாங்கள் பேர் சொல்ல முடியும். அரசியல் விமர்சனங்களைத் தனிப்பட்ட நபர்கள் சார்ந்ததாக அல்லாமல் குறிப்பிட்ட பிரச்சனைகளைச் சார்ந்ததாக முன்வைக்க நாங்கள் விரும்புகிறோம். ஜனநாயகத்தில் என்றைக்கு வாரிசு அரசியல் வருகிறதோ, அங்கு உழைக்கின்ற தொண்டர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும், அரசியலுக்கு வர வேண்டும் என்கிற இளைஞர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களும், அரசியலில் உயர் இடத்திற்கு வர வேண்டும் என்று பேசுகிற சமூக நீதியை நாங்கள் பின்பற்றுகிறோம். சமூகநீதியைப் பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு (திமுக) தகுதி இல்லை. சமூகநீதியைப் பின்பற்றிக்கொண்டு அதை அமல்படுத்திக் கொண்டிருப்பவர்கள் நாங்கள் என்றார்.