திண்டுக்கல்:பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நேற்று (ஆக.8) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா கலந்து கொண்டார்.
வக்பு சட்ட திருத்த மசோதா:செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு இஸ்லாமிய அமைப்புகளே வரவேற்பளித்துள்ளது. ஒரு தனிநபரின் சொத்துக்களை வக்பு வாரியம் தன்னுடையது என்று அறிவித்துக் கொண்டால் அதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு கூட செல்ல முடியாத நிலை தற்பொழுது உள்ளது. மேலும் வக்பு வாரியத்தில் இருந்து தடையில்லா சான்று பெற்றாலே பொதுமக்கள் தங்களுடைய சொத்துக்களை விற்க முடியும் என்ற நிலை உள்ளது.
இது கொலை செய்தவனிடமே நியாயம் கேட்பது போன்றது. எனவே புதிய வக்பு வாரிய திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த விவகாரங்களில், ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவு எடுக்கலாம் என்றும், பெண்களுக்கும் வக்பு வாரியத்தில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
வங்க தேச வன்முறை:இந்த சட்ட திருத்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்படும் பொழுது பாதிக்கப்பட்டுள்ள ஏராளமான பொதுமக்கள் பயனடைவார்கள். இஸ்ரேல் - ஹமாஸ் தொடர்பான பிரச்சினையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக பேசிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் வங்க தேசத்தில் நடைபெறும் கலவரத்தில், அங்கு சிறுபான்மையினராக வாழும் இந்துக்கள் மீதும், அவர்களது வணிக நிறுவனங்கள், வீடுகள், கோயில்கள் மீது நடத்தப்படும் கொடூர தாக்குதல்கள் குறித்து ஏன் கருத்தோ, கண்டனமோ தெரிவிக்கவில்லை.
மோடி இல்லம் தாக்கப்படுமா?:இதன்மூலம் அவர்கள் மக்களும் விரோதி என்பது தெரிகிறது. பாஜக மட்டுமே உலகில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் ஆதரவாக செயல்படுகிறது. வங்க தேசத்தில் நடப்பது போன்று இந்தியாவிலும் நடக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. வங்க தேசம் போலவே இந்தியாவிலும் பிரதமர் இல்லம் தாக்கப்படும் என்றும், வங்க தேசம் போலவே இந்துக்களும் தாக்கப்படுவார்கள் என கூறுகிறாரா?.
முத்தமிழ் முருகன் மாநாடு:இந்துக்களை வாக்கு அரசியலுக்காக மட்டுமே இந்த கட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். எனவே மத நல்லிணக்கத்தை விரும்பும் அனைவரும் இந்த கட்சிகளை அடியோடு ஒழிக்க பாடுபட வேண்டும். பழனியில் வருகிற 24, 25 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு வரவேற்கத்தக்கது. ஆனால் சமீபகாலமாக தொடர்ந்து முருகனை இழிவாக பேசி இந்து மதத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் திமுகவின் ஜால்ராவாக உள்ள சுகிசிவத்தை முன்னிறுத்தி ஏன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது?.