தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கை" சின்னத்தை மறக்க முடியாமல் தவிக்கும் வாசன்.. சைக்கிளை மறந்து பிரசாரம்.. - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

G.K.Vasan Campaign in Chennai: சென்னையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஜி.கே.வாசன் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளருக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு, பின்னர் சாதுரியமாகச் சமாளித்த சம்பவம் பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

bjp members shocked for gk Vasan asking vote in Congress hand symbol in Chennai campaign
bjp members shocked for gk Vasan asking vote in Congress hand symbol in Chennai campaign

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 1:10 PM IST

சைக்கிள் சின்னத்தை மறந்து காங்கிரஸின் 'கை' சின்னத்திற்கு வாக்கு கேட்ட ஜி.கே.வாசன்

சென்னை: நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் துவங்கவுள்ளது. அதில் முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் அரசியல் கட்சிகளின் அந்தந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதற்கிடையே தமிழ்நாடு முழுவதும் திமுக, அதிமுக, பாஜக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தீவிர சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சுயேட்சியாக களமிறங்கும் கட்சி வேட்பாளர்களும் மக்களிடத்தில் தங்களது பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேணுகோபால் நாடாளுமன்ற வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மாங்காட்டில் நேற்று (புதன்கிழமை) பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதற்கு முன்னதாக மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சென்று சாமி தரிசனம் செய்தார். இதில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கையில் கொடிகள் மற்றும் சின்னத்தை ஏந்தியபடி கோயிலுக்குள் கோஷமிட்டபடி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் திறந்த வேனில் வேட்பாளரை வைத்துக் கொண்டு ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து ஜி.கே.வாசன் வாக்கு சேகரித்தார்.

அப்போது, நமது வேட்பாளருக்கு கை சின்னத்தில் எனக் கூறியவர், திடீரென சற்று சுதாரித்துக் கொண்டு அப்படியே பேச்சை நிறுத்தி, அருகில் இருந்தவர்களின் கையை நகர்த்துமாறு கூறி சமாளித்தார். பின்னர் கையிலிருந்த சைக்கிள் சின்னத்தைப் பார்த்து சைக்கிள் சின்னத்தில் வாக்களிக்குமாறு கூறினார். இதனால் தொண்டர்கள் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் வாக்கு சேகரிப்பின் தொடக்கத்திலேயே கட்சியின் சைக்கிள் சின்னத்தை மறந்து கை சின்னத்திற்கு வாக்கு கேட்டதால், அதிருப்தி அடைந்த ஜி.கே வாசன் பொதுமக்கள் மத்தியில் ஏதும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி சென்றதாலும், தனது கட்சி வேட்பாளரின் சின்னத்தையே ஜி.கே.வாசன் மறந்து விட்டு கை சின்னத்தில் வாக்கு கேட்ட சம்பவத்தாலும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல, சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூரில் நடந்த பொதுக்கூட்ட மேடையில், பாஜகவின் சாதனைகள் குறித்துப் பேசிய அத்திப்பட்டு துரைக்கண்ணு, "இதுபோன்ற திட்டங்களைச் செய்யும் பிரதமர் மோடிக்கு வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் "கை" சின்னத்திற்கு வாக்களியுங்கள் எனச் சின்னத்தை மாற்றிப் பேசிய சம்பவம் அரங்கேறியது. அதனைச் சுதாரித்துக் கொண்ட அத்திப்பட்டு துரைக்கண்ணு காங்கிரஸில் நீண்ட காலம் இருந்ததால் பழக்கதோஷமாகி விட்டது என மன்னிப்பும் கேட்டார். இவர் சமீபத்தில் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு மாறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் இந்தாண்டு முதல் கவுன்சிலிங் முறையில் மாணவர் சேர்க்கை! - Aided College Admission

ABOUT THE AUTHOR

...view details