சேலம்: நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் இம்மாதம் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து, பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அம்மாபேட்டை பகுதியில் நேற்றிரவு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு நாட்டின் உட்கட்டமைப்புக்காக ரூ.1.17 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்தது.
ஆனால் தற்போது மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக தலைமையிலான அரசு, கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கியது. இந்த நிலையில், இந்த 33 மாதங்களில், திமுக அரசு மாநிலத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக என்ன செய்துள்ளது?" எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, "சேலத்தில் குண்டும் குழியுமாக இல்லாத சாலையைக் காட்டினால் நான் அரசியலை விட்டு விலகத் தயார். பாரதிய ஜனதா கட்சியில் ரவுடிகள் உள்ளதாகவும், அவர்கள் குறித்த லிஸ்ட் தனது கையில் உள்ளதாகவும் சேலத்தில் பிரச்சாரத்துக்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
அவருக்கு ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். திமுகவின் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை விடவா நான் அதிக ரவுடிகளை சேர்த்துள்ளேன். மேலும், கள்ளச்சாராய வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட காந்தி இன்று தமிழகத்தின் அமைச்சர். சுடுகாட்டுக் கூரை வழக்கில் சிக்கியவர் தற்போது சேலம் தொகுதி திமுக வேட்பாளர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது சட்டைக்குப் பின்னால் இருப்பதைப் பார்க்க மறுக்கிறார்" என்று விமர்சித்துப் பேசினார்.
மேலும், "பட்ஜெட்டுக்கு நேரடியாகத் தருவது மட்டும்தான் மத்திய அரசின் நிதியாம். பல்வேறு திட்டங்களுக்கு நேரடியாக வழங்கப்படுவதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். நீங்கள் கொள்ளை அடிக்க மத்திய அரசின் நிதி ஒதுக்க நாங்கள் ஒன்றும் முட்டாள் இல்லை" என அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படிங்க:"ரூ.500-க்கு காலி சிலிண்டர் தான் வரும்" திமுகவின் தேர்தல் அறிக்கையை விமர்சித்த மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!