திருநெல்வேலி:நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்கும் பொருட்டு, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாகத் திருநெல்வேலி தொகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வேட்பாளர் திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் சார்ந்த உறவினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தொடர்ச்சியாக பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இதனால், நெல்லை தேர்தல் களம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான கார்த்திகேயன், தேர்தலில் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகப் பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரான கார்த்திகேயனை சந்தித்து, பாரதிய ஜனதா கட்சியினர் மனு கொடுத்தனர்.
இதில் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயன் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிக்கு ஆதரவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயனை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர்கள் புகார் மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.