தூத்துக்குடி:திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்குச் சென்றார்.
அப்போது தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூவம் ஆறு, மது ஒழிப்புக் கொள்கை தொடர்பான கேள்விகளுக்கு, தமிழ்நாடு அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
கூவத்தில் புதைந்த ரூ.500 கோடி:
ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது, சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவேன் என்றார். இதையடுத்து துணை முதலமைச்சர், தற்போது முதலமைச்சர் ஆக உள்ளார். ஒன்றும் மாறவில்லை. கூவம் கூவமாகத் தான் உள்ளது."
"அதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.500 கோடி நிதி, கூவம் ஆற்றோடு கரைந்து போனது. காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், செலவிடப்பட்ட பணத்திற்கான வெள்ளை அறிக்கையை கோரியுள்ளார். அதைத் தான் நானும் கேட்கிறேன்."
"கூவம் ஆற்றை சரிசெய்வதற்கு பெரிய திட்டங்கள் வேண்டும். எதிர்வரும் பிரச்சினைகளை கையாண்டு சார்பின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதற்காக குஜராத்தை மாடலாக எடுத்துக் கொள்ளலாம். இதேபோல இருந்த சபர்மதி ஆறு, தற்போது மக்களுக்கு பயன்பட்டு வருகிறது."
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருமுறை குஜராத் மாநிலத்தை பார்வையிட வேண்டும். அங்கு திட்டங்கள் எப்படி சீராக வகுப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். அப்போது தான் உலகத் தரம் என்னவென்று அவருக்குப் புரியும்." என்றார்.
சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு:
இலங்கையின் புதிய அதிபர் குறித்து பேசிய அவர், "அங்கு எந்த அதிபர் வந்தாலும் நாட்டினுடைய நல்ல சமூகமான உறவை கடைபிடித்துக் கொண்டிருக்கின்றோம். தொடர்ந்து மீனவர்களை விடுவிக்க கேட்டு கொண்டு இருக்கிறோம். மீனவர்கள் மறுவாழ்வு, எல்லை தாண்டி செல்லாமல் இருக்க ஒரு லட்சம் படகுகளுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்துவதற்கு ரூ.17 கோடி நிதி தமிழ்நாட்டுக்கு கொடுத்துள்ளோம்," என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "கடந்த மூன்று வருடங்களாக தமிழ்நாட்டில் கொலைகள் அதிகரிததுள்ளன. கொலைகளுக்கான சரியான விசாரணை மேற்கொள்ளபடவில்லை. திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் கொலை தொடர்பான விசாரணை மோசமாக நடக்கிறது. எதிலும் பெரிய முன்னேற்றம் இல்லை. இதனால் சட்டம் ஒழுங்கு வெகுவாக பாதித்துள்ளது," என்று கூறினார்.
திசைதிருப்பும் மதுஒழிப்பு மாநாடு:
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்டோபர் இரண்டாம் தேதி கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படுகிறது. இது குறித்து செய்தியாளர் எழுப்பியக் கேள்விக்கு பதிலளித்த எல்.முருகன், திமுகவும் விசிகவும் சேர்ந்து நடத்தும் நாடகம் இது எனக் கூறியவர், முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள்கள் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சரால் எதிர்பார்த்த முதலீடுகளை கொண்டு வர முடியவில்லை; ஆகையால் அதை திசைத்திருப்பவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார். மேலும், எங்கு பார்த்தாலும் கஞ்சா, டாஸ்மாக் என சட்டம் ஒழுங்கு சீரற்று இருக்கிறது என்று கூறி தனது பேட்டியை ஒன்றிய இணையமைச்சர் நிறைவு செய்தார்.
இதையும் படிங்க:
- முத்ரா கடன்: ரூ.10 லட்சம் வரை எளிதில் கடன்; எப்படி விண்ணப்பிப்பது! - mudra loan online apply
- ஒரே நேரத்தில் தந்தை - மகன் அதிகார மையம்.. ஆட்சி கண்ட மாநிலங்கள் விபரம்! - Udhayanidhi Stalin