மயிலாடுதுறை:மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டம் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் தலைமையில் நடைபெற்ற நிலையில், பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாடு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தின் முடிவில் ஹெச்.ராஜா, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இடஒதுக்கீடு குறித்து ராகுல்காந்தி கருத்து:"எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அமெரிக்காவில் பேசியபோது பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்கு இப்போது இடஒதுக்கீடு அவசியமில்லை எனவே இடஒதுக்கீட்டை ரத்து செய்வது காங்கிரஸ் நோக்கம். அதே கருத்தை ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி பேசியுள்ளனர். எனவே காங்கிரஸ் ரத்தத்தில் இது ஊறிப்போனது.
ஹரியானாவில் பாஜக வெற்றி:அதனால்தான் ஹரியானா மக்கள் இந்த தேர்தலில் காங்கிரஸுக்கு நல்ல பாடம் புகட்டியுள்ளனர். 2019 தேர்தலில் பாஜக 40 எம்எல்.ஏ-க்கள் ஜெயித்து கூட்டணி ஆட்சி அமைத்தோம். இந்த தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்றுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் பாஜகதான் அதிக வாக்கு:ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியால் பெரும்பான்மை பெற்றுள்ளனர். ஆனால், இந்த தேர்தலில் தணிக்கையாக பார்த்தால் மிக அதிகமான வாக்குகள் பெற்று முதல் இடத்தில் இருப்பது பாஜக கட்சி. 370ஐ ரத்து செய்தது சரி என்பதை மக்கள் நிரூபித்து பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர்" என்றார்.