தஞ்சாவூர்:கும்பகோணம் மடத்துத்தெருவில், இந்து மக்கள் கட்சி சார்பில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலை பிரதிஷ்டையில் பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா பங்கேற்றார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, “பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு மேலே அமைக்கப்பட்டுள்ள சாமியானாவை அறுப்போம், சிலையின் பீடத்தை அறுப்போம் என போலீசார் மிரட்டுவதாக கேள்விப்பட்டேன். போலீஸ் தேவாலயத்தில் போய் சிலுவை அறுப்பீர்களா? தமிழ்நாட்டில் விநாயகர் சிலை பிரதிஷ்டை விவகாரத்தில் எந்த போலீசாவது அத்துமீறி நடந்து கொண்டால், அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் இதற்கு எதிராக பாஜக, இந்து அமைப்புகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடும்.
சனாதனத்தை மலேரியா, கொசு போல அழிப்பேன் எனக் கூறிய தீய சக்தி உதயநிதி. பழனியில் நடந்தது ஆன்மீக மாநாடே அல்ல. இந்து விரோத மாநாடு. இது ஒரு ஏமாற்று அரசியல், மக்கள் இதனை ஏற்க மாட்டார்கள். இதை தமிழ்நாடு முதலமைச்சரிடம் சொல்லுங்கள், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் அமெரிக்காவிற்குச் சுற்றுலா சென்றுள்ளார்.
முன்பு, நிதி ஈர்ப்பதற்காக குடும்பத்துடன் துபாய் சென்றார். தம்படி காசு கூட வரவில்லை. தமிழ்நாட்டின் மூத்த அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு போன்றோர் உதயநிதியின் அடிமைகளாகத் தான் உள்ளனர். தமிழகத்தில் நடைபெறுவது இந்து விரோதிகளின் அடிமை அரசாங்கம். தேசிய கல்விக் கொள்கையை பற்றிப் பேச பொன்முடி யார்? மிகப்பெரிய ஊழல்வாதி, அமைச்சராக இருக்கவே அருகதையற்றவர். உயர் கல்வித்துறையில் 294 கல்லூரிகளில் 980 பேராசிரியர்கள் போலி ஆதார் அட்டை அளித்து பணியாற்றியதாக கணக்கு காட்டியதைக் கூட தெரியாத, திறனற்ற, திராணியற்றவர்.