சென்னை: நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சென்னையில் உள்ள அவரது நிறுவனங்களிலிருந்து தேர்தல் செலவுக்காக, பல கோடி ரூபாய் பணம் கொண்டு செல்வதாக கடந்த மாதம் 6ம் தேதி உளவுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தனர்.
அப்போது, ஏசி பெட்டி A1-ல் இருந்த 26, 27, 28 ஆகிய இருக்கைகளில் அமர்ந்திருந்த 3 பேர், தனித்தனிப் பைகளில் பணம் வைத்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து உளவுத்துறை போலீசார் தாம்பரம் மாநகர போலீசார் மற்றும் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், நெல்லை எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரயில் நிலையத்தை அடைந்ததும் பணம் வைத்திருந்த மூன்று பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணிபுரியும் சதீஷ் அவரது சகோதரர் நவீன் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த டிரைவர் பெருமாள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த ரூ.4 கோடியை பறிமுதல் செய்த போலீசார், அதன் தொடர்ச்சியாக நயினார் நாகேந்திரன் நெருங்கிய உறவினரும், தொழிலதிபருமான முருகனின் சாலிகிராமம் வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் சோதனை நடத்தினர்.
தேர்தல் பரபரப்புகளுக்கிடையே இவ்வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. பணத்துடன் பிடிபட்ட 3 பேர் மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் அவரிடம் பணியாற்றும் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.