ஈரோடு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீரப்பு பாஜகவிற்கு எதிரான தீர்ப்பாக கருதுகிறோம். பாஜகவிற்கு அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் தோல்வியைக் கொடுத்து இருக்கிறார்கள். பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறவில்லை. நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு போன்றோர் ஆதரவு காரணமாக கூட்டு ஆட்சி அமைந்து இருக்கிறது.
பிரதமர் மோடி தேர்தலின் போதும், தேர்தலுக்கு முன்னரும் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று வீராப்பு பேசினார். அதற்கு மக்கள் பலத்த அடி கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி, இந்தியாவை உலகின் மூன்று பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாற்றப் போவதாக கூறினார். ஆனால், உலகில் மிக மோசமான நிலையில் நமது பொருளாதாரம் உள்ளது.
திடீரென மூன்று சட்டங்களை செயல்படுத்துவது கண்டனத்துக்குரியது. இந்த மூன்று சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதமே ஜனநாயகத்திற்கு விரோதமானது, அரசியல் சட்ட நெறிகளுக்கு புறம்பானது. இந்த சட்டங்களை கைவிடுவதோடு, நிறுத்தி வைக்க வேண்டும். அதற்காக தமிழகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தேர்தலில் 400 இடங்களைப் பெற்று விட்டால் அரசியல் சட்டம் மாற்றப்படும், சமூக நீதி, இட ஒதுக்கீடு கைவிடப்படும் என்று அச்சத்தை உருவாக்கி விட்டார்கள். மக்கள் நிலைமையை உணர்ந்து பாஜகவிற்கு பெரிய அடியைக் கொடுத்தார்கள். மக்கள் அளித்த தீர்ப்பு பாஜகவிற்கு, மோடிக்கு எதிரானது. இதை பாஜக ஒப்புக் கொள்கிறதோ இல்லையோ அது தான் உண்மை.