சென்னை:‘சில பயணங்கள் சில பதிவுகள்’ நூல் வெளியீட்டு விழா இன்று (சனிக்கிழமை) மயிலாப்பூரில் நடைபெற்றது. இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அண்ணாமலை பேசியதாவது, “விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய்ந்துவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகிறேன். தமிழகத்தைப் பொறுத்தவரையில் இடைத்தேர்தலின் முடிவுகள் எப்போதும் ஓர் ஆச்சரியம்தான்.
அது தொடர்ந்து ஆளுங்கட்சியைச் சார்ந்துதான் போகிறது. இடைத்தேர்தல் முடிவுதான் தமிழக மக்களின் மனநிலை என்று நினைத்தால், அது தவறு. இடைத்தேர்தலைப் பொறுத்தவரை அது ஒரு குறியீடு இல்லை. 87 சதவீதம் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் ஜெயிக்கிறார்கள். ஆளும் கட்சியை எதிர்த்து ஒரு சட்டமன்ற உறுப்பினரைக் கொண்டு வர வேண்டுமா என மக்கள் யோசிக்கிறார்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், இடைத்தேர்தல் முடிவுகள் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக எடுத்துக்கொள்ள முடியாது.
இடைத்தேர்தல்களில் முறைகேடுகள் தற்போது சர்வசாதாரணமாக சென்று கொண்டிருக்கின்றன. இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, அந்தந்த பகுதியில் உள்ள சூழல் முடிவு செய்யும். ஹரியானா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா மாநிலத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. எனவே, பாஜக அதனை தக்கவைக்கும். எனவே, இந்த முடிவுகளை பொதுவான கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது” என்றார்.