கோயம்புத்தூர்:சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் பல்வேறு யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை ஈஷா யோகா மையத்தில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று யோகா பயிற்சிகளை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "ஆதியோகி முன்பு நாம் நின்று கொண்டு இருக்கிறோம். யோகாவை வாழ்வியல் முறையாக மக்கள் கடைபிடித்து வருகின்றனர். சர்வதேச யோகாவை உலகம் முழுவதும் இந்தியர்கள் எடுத்து செல்கின்றனர். பிரதமர் ஸ்ரீ நகர் பகுதியில் யோகா செய்து வருகிறார். நாம் இன்று இங்கு யோகா தினத்தை கொண்டாடி வருகிறோம். இன்று கிரியா பயிற்சி செய்து உள்ளோம்.
மனஅழுத்தத்தின் ஆரம்ப புள்ளியாக செல்ஃபோன் பயன்பாடு வந்துள்ளது. தற்கொலை வரைக்கும் சோஷியல் மீடியா கொண்டு சென்றுள்ளது. நம்முடைய வாழ்வியலில் உள்நோக்கி பயணம் செய்ய வேண்டும். காலம் வேகமாக நம்மை ஓட வைக்கின்றது. தனிமையாக இருந்தாலும் இன்பமாக வாழ வேண்டும். ஈஷா அரசியல் சார்ந்த பகுதி இல்லை. இங்கு அரசியல் பேசுவது சரியில்லை. பள்ளிக்கல்வி துறையில் யோகா கொண்டு வர வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் யோகா குறித்த அம்சங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் யோகாவை கட்டாய பாடமாக கொண்டு வர வேண்டும்.
போலீசில் இருந்தபோது மனஅழுத்தம்: நான் காவல் துறையில் இருந்தபோது, மனஅழுத்தம் அதிகளவில் இருந்தது. அப்போது அதிலிருந்து வெளிப்பட ஈஷாவிற்கு வந்தேன். மனஅழுத்தத்தில் இருந்து வெளியே வர யோகா எனக்கு மிகப்பெரிய கருவி.தாமரை இலை மேல் தண்ணீர் போன்று இருக்க வேண்டும். அதற்கு யோகா உதவி செய்யும்.