சென்னை: 78வது சுதந்திர தினத்தையொட்டி பாஜக தலைமை அலுவலகத்தில், கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில், இன்று தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தேசியக் கொடியை ஏற்றினார்.
பின்னர், விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது, “நமது தேசத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக மாற்றுப்பாதை கிடைத்திருக்கிறது. இன்று பிரதமர் மோடி செங்கோட்டையில், 19ஆம் நூற்றாண்டில் 40 கோடி இந்தியர்கள் போராடி நமக்கென்று ஒரு நாட்டைப் பெற்றுக் கொடுத்தார்களோ, அதேபோல், 21ஆம் நூற்றாண்டில் 140 கோடி மக்கள் போராடி நமக்கென ஒரு வளர்ந்த பாரதத்தை போராடிக் கொடுக்க வேண்டும் என்றார்.
மேலும், ஒரே நாடு ஒரே தேர்தலை மக்களிடம் வலியுறுத்தியுள்ளார். எந்த மதத்தையும் சாராத, அனைத்து மக்களை உள்ளடக்கிய சட்டங்கள் இருக்க வேண்டும். அதை நிறைவேற்றுவது நமது கடமை என வலியுறுத்தியுள்ளார். வங்கதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, அங்கு உள்ள இந்துக்களின் பிரச்னைகள் குறித்து பேசியுள்ளார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு, தான் இழந்த அந்தஸ்தை மீண்டும் பெறவேண்டும். தமிழகம் வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்ல வேண்டும். வருகின்ற காலத்தில் நம் உழைப்பின் மூலமாக மக்கள் அங்கீகாரத்தைப் பெற்று 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு நாம் எல்லோரும் ஒன்று சேர வேண்டும். 2026-ல் கோட்டையில் தேசியக் கொடியேற்ற மக்கள் வாய்ப்பு அளிப்பார்கள். வளர்ந்த பாரதம் வேண்டுமென்றால், திமுக ஆட்சி இருக்கக்கூடாது.