கோயம்புத்தூர்:கோவை சித்ரா பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளரை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், "சர்வதேச அரசியல் குறித்து படிப்பதற்காக லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் செல்வதாக செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இதை அதிகாரப்பூர்வமாகப் பேச வேண்டிய நேரத்தில் பேசுகிறேன். தற்போது கட்சியின் உறுப்பினராக இருக்கிறேன்.
கட்சி முடிவெடுக்கும், அதன் பிறகு இது குறித்து கூறுகிறேன்.மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கண்ணை மூடிக்கொண்டு வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்காக தெருத்தெருவிற்க்கு திமுகவினர், அமைச்சர் என ஈரோடு இடைத்தேர்தல் மாடலை ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த இடைத்தேர்தலில் திமுக என்ன வேலை செய்தாலும், தேர்தல் முடிவு என்பது அதிர்ச்சியாகத் தான் இருக்கும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கள்ளக்குறிச்சியின் கள்ளச்சாராய மரணம் எதிரொலிக்கும். மேயர் என்பது ஒரு அற்புதமான பொறுப்பு. ஆளுமை மிக்க தலைவர்கள் அந்த பொறுப்பில் அமர்வார்கள். சென்னை ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. ஆனால் திமுக வந்த பிறகு அந்த அலுவலகத்தையே குட்டிச்சுவராக்கி விட்டார்கள் மூன்று வரி தாய்மொழி தமிழை சரியாகப் படிக்க முடியாதவர்கள் மேயராக இருக்கிறார்கள்.திருநெல்வேலி வெள்ளம் வரும்போது மேயரை காணவில்லை, எங்கே எனக் கேட்டால், சேலத்தில் இளைஞர் அணி மாநாட்டுக்கு பந்தல் போட்டுக் கொண்டிருக்கிறார். இதுதான் தமிழகத்தில் பல மேயர்களின் கதை" என்றார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ராகுல் காந்தியிடம் யார் பொய் பேசுகிறார்களோ அவர்கள்தான் எதிர்க்கட்சித் தலைவர் என யாரோ கூறிவிட்டார்கள். அதனால் முழுமையாகத் தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு பொய்யாகப் பேசிக் கொண்டிருக்கிறார் என விமர்சித்தார். மேலும் அக்னிவீர் திட்டத்தில் இறந்த குடும்பத்துக்கு 1.10 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக அமைச்சர் ராஜநாத் சிங் கூறியதை சுட்டிக்காட்டியதோடு, ராகுல் காந்திக்கு என்ன இந்து பாரம்பரியம் இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார்.