பெரம்பலூர்:நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய சக்தி கேந்திர பொறுப்பாளர்களுக்கு (5 பூத்துகள் சேர்ந்தது ஒரு சக்தி கேந்திரா) பாராட்டுப் பரிசு வழங்கும் விழா, பாஜக சார்பில் இன்று பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அண்ணாமலையிடம் 25 எம்பிக்களை பெற்றிருந்தால் தமிழகத்திற்கு அதிகமான நிதியைக் கேட்டு பெற்றிருக்க முடியும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியது குறித்து கேட்டதற்கு, “ஒரு மாநிலத்திற்கு மட்டும் எப்படி நிதி கொடுக்க முடியும். அதிக எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்குச் செல்லும் பொழுது உரிமையுடன் கேட்க முடியும் என்பதையே அவர் அப்படி தெரிவித்துள்ளார். பிரதமரைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் ஒரு எம்பி இருந்தாலும் அதே மரியாதை தான் 39 எம்பிக்கள் இருந்தாலும் அதே மரியாதைதான். பாரபட்சம் இல்லாமல் மக்களுக்காக பிரதமர் செயல்பட்டு வருகிறார்” இவ்வாறு அவர் கூறினார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேசிவிட்டு வெளியில் வந்து ஐந்து நிமிடங்களில் எனது மைக் ஆஃப் செய்யப்பட்டது என்று பொய்யான தகவலை கூறி வருகிறார். இது குறித்து நிதி ஆயோக் கூட்டத்தின் நிர்வாக தலைவர் சுப்பிரமணியம், மைக்கை ஆஃப் செய்யும் முறை அங்கு கிடையாது என்று தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.
தொடர் புறக்கணிப்பு: நமது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2022 நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லவில்லை. அதற்கு, அவரது தந்தை கருணாநிதி உயிரிழந்த நினைவு நாள், அதனால் செல்லவில்லை என்று தெரிவித்தார். 2023ஆம் ஆண்டு கூட்டத்திற்கு அவர் செல்லவில்லை. அப்பொழுது வெளிநாடு பயணம் சென்றிருந்தார். தற்பொழுது நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற வார்த்தை இடம் பெறவில்லை என்று கூறி நிதி ஆயோக் கூட்டத்தை முதலமைச்சர் புறக்கணித்துள்ளார்.
முதலமைச்சர் நேரில் சென்று தமிழகத்தின் நிலையை எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும். தமிழகத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களையும், அடுத்த இலக்குகள் பற்றியும் பிரதமரிடம் எடுத்துரைத்திருக்க வேண்டும். முதலமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோவிற்கு நாங்கள் ஏற்கனவே பதில் அளித்துள்ளோம். எனவே, முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது.