அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு கோயம்புத்தூர்:மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து 2வது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக மத்திய அமைச்சர் எல் முருகன் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து கோவை வந்த எல்.முருகனுக்கு கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அண்ணாமலை மற்றும் எல்.முருகன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அண்ணாமலை, “எல்.முருகன் இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராகி உள்ளார். தமிழகத்திற்கும் டெல்லியில் உள்ள அரசுக்கும் இணைப்புப் பாலமாக எல் முருகன் இருக்கிறார். ஜே.பி.நட்டா பரிந்துரையின் பேரில் அவர் மீண்டும் மாநிலங்களைவை உறுப்பினராகியுள்ளார்.
இவருக்கு வழங்கிய பதவி தமிழகத்தில் மேலும் பாஜகவைப் பலப்படுத்தும். தமிழகத்திற்கு வர வேண்டிய அனைத்து வளர்ச்சித் திட்டத்திற்கு உறுதுணையாக இருப்பார். கட்சியின் கட்டளைக்கு ஏற்றவாறு பணியாற்றுகிறார் எல்.முருகன்” என்றார். இதனைத் தொடர்ந்து, அதிமுக நிர்வாகி நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய விதமாகப் பேசியிருந்து தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்தவர், “தமிழகத்தில் கடந்த ஆறு மாதமாக த்ரிஷா குறித்து சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல இதற்குக் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் என்ன வேண்டுமானாலும் பொது வெளியில் பேசலாம் என்றால் கருத்துச் சுதந்திரத்திற்கு என்ன அர்த்தம். அதனால் த்ரிஷாவை தவறாகப் பேசியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மேலும், “கோயம்புத்தூரை திமுக தொடர்ச்சியாகப் புறக்கணித்து வருகிறது. மதுரையில் உள்ள நூலகம் போலக் கோவையில் அமையும் என்றார்கள் ஆனால் அதற்கு இன்னும் பணம் தரவில்லை. இதை தான் வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன் கூறிக்கொண்டு வருகின்றனர்” என்றார்.
தொடர்ந்து பேசிய எல்.முருகன், எனக்குப் பதவி வழங்கிய பிரதமர் மோடி மற்றும் மத்தியபிரதேச நண்பர்களுக்கும் நன்றி. தமிழகத்திலிருந்தும் ஒரு பிரதிநிதி மாநிலங்களவைக்கு வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து மோடி அவர்கள் இந்தப் பதவி வழங்கியிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்குப் பல்வேறு திட்டங்களைப் பிரதமர் வழங்கியுள்ளார்.மத்திய அரசு தமிழகத்திற்குக் கொடுத்த நிதியால் இன்று தமிழகம் உள்கட்டமைப்பில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது” என்றார்.
இதையும் படிங்க:"காடு என்றால் காடுதான்"- நீலகிரி காடுகளை பாதுகாத்த உச்சநீதிமன்றம்: 25 ஆண்டு ஆனாலும் அதுதான் தீர்ப்பு!