சென்னை:செல்போன் கலாச்சாரம் அதிகரிக்கத் தொடங்கிய நாள்களிலிருந்தே சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்களும், சர்ச்சைகளும் உலா வந்து கொண்டு இருக்கின்றது. அந்த வகையில்தான் சமீப நாள்களாக யூடியூபில் பிரபலமாக இருக்கும் இர்பானுக்கும், பிரியாணி மேன் என்ற சேனலை நடத்தி வரும் அபிஷேக் என்ற இளைஞருக்கும் இடையேயான மோதல் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
பிரச்சனை தொடங்கியது எங்கே?கடந்த ஆண்டு மே மாதம் இர்பானின் கார் மறைமலைநகர் அருகே விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மறைமலை நகர் அருகே சாலையைக் கடக்க முயற்சி செய்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இந்த காரை இர்பான் ஒட்டி வரவில்லை எனவும், அவரது உறவினர் அசாருதீன் என்பவர் ஓட்டி வந்ததாகவும், இரண்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
வீடியோ வெளியிட்ட பிரியாணி மேன்:இந்த விபத்து நடந்து ஒரு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் கடந்த ஜூன் 22 ஆம் தேதி பிரியாணி மேன் என்ற யுடியூப் சேனலில் அபிஷேக் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், "இர்பான் இப்போதும் மட்டும் அல்ல கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு இருந்தே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
ஆனால் அதிலிருந்து அவர் எப்படி சுலபமாகத் தப்பித்து விடுகிறார் என பேசியிருந்தார். மேலும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இர்பான் காரால் ஏற்பட்ட விபத்து, மற்றும் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டது, மற்றும் அவர் ரிவ்யூ செய்த ஹோட்டலில் உணவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்தது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
ஆவேமடைந்த இர்பான்:பிரியாணி மேன் சேனலில் வீடியோ வெளியாகி 1 மாதம் கழித்து, அவர் வெளியிட்ட வீடியோவிற்கு பதில் தரும் விதமாக ஜூலை 21ஆம் தேதி இர்பான் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், "எந்த ஒரு ஆதராமும் இல்லாமல் என்மீது தவறான குற்றச்சாட்டுகளை பிரியாணி மேன் வைத்துள்ளார்.
இதனை பற்றி பேசுவதற்கு அவரை தொடர்பு கொண்டாலும் அவர் போச மறுத்து விடுகிறார். நான் நினைத்தால் அவர் மீது அவதூறு வழக்கு தொடர முடியும், ஆனால் என்னுடைய நோக்கம் அதுவல்ல" என பல்வேறு விஷயங்களுக்குப் பதில் தரும் விதமாக அந்த வீடியோவில் இர்பான் பேசி இருந்தார்.
தற்கொலை முயற்சி:இந்த பிரச்சனை ஒரு புறம் சென்றுக் கொண்டு இருக்க நேற்று, பிரியாணி மேன் யூடியூப் சேனலில் லைவ் செய்து கொண்டு இருந்த அபிஷேக், தனது தற்கொலைக்கு ஜேசன் என்பவர்தான் காரணம் என்று கூறி விட்டு, தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதனை லைவ்வில் பார்த்துக் கொண்டு இருந்த அவரது நண்பர்கள் சிலர், பிரியாணி மேனின் தாயாருக்கு போன் செய்ததாகவும், அதன் பேரில் அவர் வந்து காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
கைது செய்யப்படுவரா பிரியாணி மேன்?பொதுவாகத் தற்கொலை செய்ய முயற்சிப்பதே சட்டப்படி குற்றமாகும். தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050 ஆகியவற்றிற்கு தொடர்பு கொள்ள வேண்டும். இந்தநிலையில் சுமார் 4 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் வைத்து இருக்கும் பிரியாணி மேன் சேனல் லைவ்வில் அபிஷேக் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.