சென்னை: திராவிடர் கழகம் சார்பில் ‘நீட்டை ஓழிப்போம் சமூக நீதி காப்போம்’ என்ற இருசக்கர வாகன பரப்புரை பயணம் இன்று துவங்கப்பட்டது. இதன்படி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், புதுச்சேரி, தாராபுரம் மற்றும் சென்னை உள்ளிட்ட ஐந்து இடங்களிலிருந்து சேலம் நோக்கி இருசக்கர வாகன பரப்புரை துவக்கப்பட்டது.
திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu) இந்த இருசக்கர வாகன பேரணியை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தொடங்கி வைத்தார். இந்த இருசக்கர வாகன பேரணியானது ஜூலை 15ஆம் தேதி சேலத்தில் நிறைவடைந்து பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்த வகையில், இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, சென்னை பெரியார் திடலில் 20 இருசக்கர வாகனங்களில் 40 திராவிடர் கழகத்தினர் சேலம் நோக்கி பேரணி பரப்புரையைத் தொடங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், "வழி நெடுகிலும் பொதுமக்களிடம் சென்று நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம். சமூக நீதி வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாள். பெரியார் காங்கிரஸில் இருந்த போதே சமூக நீதிக்காக குரல் கொடுத்தார். அதில் இருந்த பார்ப்பனர்கள் அதற்கு ஆதரவு தராததால் காங்கிரஸில் இருந்து பெரியார் வெளியேறினார்.
பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு 50 சதவீத இடங்களை மட்டுமே கேட்டார், ஆனால் அது மறுக்கப்பட்டது. அன்று 50 சதவீதம் மறுக்கப்பட்ட நிலையில், இன்று தமிழ்நாட்டில் 69 சதவீதம் ஒதுக்கீட்டை அனுபவிக்கிறோம் என்றால், அதற்கு காரணம் பெரியாரின் சுயமரியாதை இயக்கமும், திராவிட முன்னேற்றக் கழகமும் தான். சமூக நீதிக்காக திராவிட கழகம் நடத்திய பிரச்சாரங்கள், போராட்டங்கள் மிகப்பெரிய வரலாற்றைக் கொண்டுள்ளது.
பெரியாரின் வழியில் திராவிடர் கழகம் எடுத்து வைத்த நடவடிக்கைகள் தோல்வியடைந்ததே இல்லை. அந்த வகையில், நீட்டை எதிர்த்து தமிழகத்தில் 5 முனைகளில் இருந்து மாணவர்கள் பிரச்சாரம் செய்து 17ஆம் தேதி சேலத்திற்கு வருகின்றனர். முன்னதாக, நடத்தியது போல இருசக்கர பேரணி நடத்தியிருக்கிறோம். மக்கள் மத்தியில் கருத்துகளை எடுத்துச் சொல்ல போகிறோம். எழுச்சி ஏற்படுத்தினால் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக திராவிடர் கழகம் எடுத்துள்ள இந்த போராட்டம் வெற்றியடையும். பாஜகவை தவிர்த்து அனைவரும் இதற்கு ஆதரவு அளித்து பாராட்டுகின்றனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:2019 நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கு; என்டிஏவுக்கு கெடு விதித்த உயர் நீதிமன்றக்கிளை!