ஈரோடு:"அணை இன்றி முற்றுப்பெறாது நீரின் அழகு" என்பார்கள். அதனை மெய்ப்பிக்கும் வகையில் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் பாசனத்துக்கு பயன்பெறும் விவசாயத்துக்கு முக்கிய பங்காற்றி வரும் பவானி சாகர் அணை 69 ஆண்டுகள் நிறைவு செய்து 70வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நாளில் அணை குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்வோம்.
அணை உருவான விதம்:நீலகிரி மலைப்பகுதியிலிருந்து வரும் பவானி ஆறு, மாயாறு கூடுமிடத்தில் அணை கட்ட வேண்டும் என 1947ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. அப்போதையை காலத்தில் உணவு பற்றாக்குறையால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் இந்த திட்டத்திற்கு பவானித்திட்டம் என பெயரிடப்பட்டு இதற்கான பூர்வாங்கப் பணியை அப்போதையை அரசு துவங்கியது.
மேலும், இப்பகுதியில் உணவு பஞ்சத்தை போக்குவதற்கு அணையின் வலது பகுதியில் 124 மைல் நீண்ட கால்வாய் வெட்டி, முன் பருவத்தில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கரில் நெல், வாழை, மஞ்சள் பயிரிடவும் பின் பருவத்தில் கடலை, எள், பருத்தி போன்ற பயிர்கள் சாகுபடி செய்ய பூர்வ பணிகள் துவங்கின.
தொடர்ந்து 1948ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி ரூ.10 கோடி செலவில் அணைக்கான கட்டுமானப் பணி துவங்கப்பட்டு, இதற்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஷட்டர்கள் பயன்படுத்தப்பட்டது. சுமார் 7 ஆண்டுகள் நடைபெற்ற இந்தக் கட்டுமானப் பணியின் போது அப்பகுதி மக்கள் வீட்டுக்கு ஒருவர் என பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அணை கட்டுமானம்:மேலும் பவானிசாகர் அணை கட்டுமானப்பணியை அப்போதைய பிரதமர் நேரு, சென்னை மாகான முதல்வர் ராஜாஜி போன்ற தலைவர் பார்வையிட்ட பெருமையும் இந்த அணைக்கு உள்ளது. அணையின் மத்தியில் 1,523 அடி கொண்டு கருங்கல் கட்டடமும், இடது புறத்தில் 3 மைல் மற்றும் வலது புறத்தில் 3.5 மைல் என மொத்தம் 5.5 மைல் தூரத்துக்கு மண்கரைகள் அமைக்கப்பட்டன.