ஈரோடு: அமாவாசை நாட்களில் நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தும், பிண்டம் வைத்தும் வழிபாடுகள் நடத்தினால், அவர்களின் ஆன்மா அமைதி பெறும், வாழ்வில் நன்மைகள் பிறக்கும் என்பது ஐதீகம். மற்ற அமாவாசையில் தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள், தை அமாவாசையில் செய்தால் வருடம் முழுக்க முன்னோர்களுக்கு விரதம் இருந்து படையல் வைத்ததற்கு சமம் என்பது நம்பிக்கை.
அதன் அடிப்படையில், இந்த ஆண்டு தை அமாவாசை நாளான இன்று (பிப்.9), ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடல், கன்னியாகுமரி கடல், குற்றாலம், பாபநாசம், சென்னை மயிலாப்பூர் தெப்பக்குளம், திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் ஏராளமானோர் புனித நீராடி, எள் பச்சரிசி தர்ப்பணை வைத்து முன்னோர்களை வழிபட்டனர்.
அந்த வகையில், பவானி, காவிரி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமிர்நதிகள் சங்கமிக்கும் இடமான பவானி கூடுதுறையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பவானி ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயிலில் உள்ள பரிகார மண்டபங்கள் மட்டுமின்றி, தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பரிகாரக் கூடங்களிலும் பொதுமக்கள், தங்களது மூதாதையருக்கு திதி, பித்ரு பூஜை, தர்ப்பணம் போன்ற பரிகாரங்களும், தோஷ நிவர்த்தி பூஜைகளும் செய்து, ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை தரிசனம் செய்தனர்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஈரோடு மட்டுமின்றி, அண்டை மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகை தந்துள்ளதால், அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இருக்க, ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் சங்கமேஸ்வரர் கோயிலில், திதி கொடுக்க வருபவர்களுக்கு என இந்து அறநிலையத்துறையின் சார்பில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் அர்ச்சகர்கள், அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக பணம் வாங்குவதாகவும், ஏற்கனவே திதி கொடுத்த நபர்கள் வைத்து விட்டுச் சென்ற பொருட்களை வைத்தே திதி கொடுப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த மாது என்பவர் கூறுகையில், “எனது உறவினர்களுடன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தேன். பூஜை செய்வதற்கு எவ்வளவு என்று அர்ச்சகர்களிடம் கேட்டபோது, ஆயிரம் ரூபாய் வேண்டும் என கேட்டனர்.
700 ரூபாய்க்கு பேசி முடித்து தர்ப்பணம் கொடுக்கும்போது, ஏற்கனவே தர்ப்பணம் கொடுத்துவிட்டுச் சென்றவர்கள் வைத்து விட்டுப் போன பொருட்களையே வைத்து அர்ச்சகர்கள் பூஜை செய்தனர். இதைப் பற்றி கேட்டபோது, அர்ச்சகர்கள் வெளியேறுமாறு திட்டினர். இது போன்ற நிலைமை இனிமேல் ஏற்படக்கூடாது. எனவே, இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார். தர்ப்பணம் கொடுக்க வந்தவரை அர்ச்சகர் வெளியேறுமாறு திட்டிய வீடியோ பதிவு, தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:கரூரில் பெரியார் சிலை முன்பு காதல் ஜோடி சுயமரியாதை திருமணம்!