கோயம்புத்தூர்: மருதமலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக அலுவலர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் கடந்த மாதம் நடந்தது. அக்கூட்டத்தில், பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக் குழு மற்றும் பொறுப்பு பதிவாளர் ஆகியோர் இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதல் காரணமாக, ஆயிரக்கணக்கான கோப்புகள் எந்த நடவடிக்கையுமின்றி தேங்கி இருப்பதனால், பல்கலைக்கழக நிர்வாகம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், இதனால் பல்கலைக்கழகம் பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அலுவலர் சங்கம் கூறியுள்ளது.
தீர்மானங்கள்:மேலும், இக்கூட்டத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து முதலமைச்சர், தமிழக ஆளுநர், உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
பல்கலைக்கழக நிர்வாகத்தை வலியுறுத்தி வருகிற 15ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இப்போராட்டத்திற்கு, தமிழ்நாடு அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்க கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் மற்றும் தோழமை சங்கங்களை அழைக்கப்படும் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.