நீலகிரி: நீலகிரி மாவட்டத்தை பொறுத்த அளவில், 65 சதவிகிதம் அடர்ந்த வனப்பகுதிகளைக் கொண்ட மாவட்டமாகும். இதனால் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்கள் மட்டுமின்றி, பகல் நேரங்களிலும் கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என பலரும் அச்சமடைந்து வருகின்றனர்.
உதகையில் கடந்த பிப்.9ஆம் தேதி இரவு, கரடி குடியிருப்பு பகுதிகளில் உலா வந்தது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நேற்று இரவு (பிப்.29) குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி வளாகத்தில் ஒற்றை கரடி ஹாயாக உலா வந்தது. இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ராணுவ பயிற்சி கல்லூரியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெற வரும் முக்கியமான கல்லூரி என்பதால், கரடியால் ஆபத்து ஏற்படாமல் இருக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.