நீலகிரி: மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் சுமார் 65 சதவீதம் வனப்பகுதியைக் கொண்டது. இந்த காடுகளில் கரடி, காட்டெருமை, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. உதகை சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
அதிலும், பகல் நேரங்களிலேயே குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடி, தற்போது 32வது வார்டு லவ்டேல் பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் அருகில் இரண்டு கடைகளை இரவோடு இரவாக உடைத்து உள்ளிருந்த எண்ணெய், அரிசி, சர்க்கரை மற்றும் உணவுப் பொருட்களை சூறையாடிய கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
மேலும், பலமுறை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, வனத்துறையினர் இப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
மேலும், இது குறித்து வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்று கரடி நடமாட்டம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் அப்பகுதியில் கூண்டு வைத்து கரடியை பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கரடியை குடியிருப்பு பகுதியில் கண்டவுடன் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:சாமி கும்பிட வந்தேனுங்க.. குன்னூர் அருகே கோயிலுக்குள் உலா வந்த கரடி!