நீலகிரி: உதகை, எல்லநள்ளி அருகே உள்ள கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை மற்றும் கரடி சர்வ சாதாரணமாக உலா வந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால், வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கூண்டு வைத்து வன விலங்குகளை பிடிக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வன பகுதியை கொண்டுள்ளது. இந்த வன பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. தற்போது வனப்பகுதிகளில் நிலவும் வறட்சியின் காரணமாக வன விலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு வருவது அதிகரித்துள்ளது.
இவ்வாறு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் கால்நடைகள் மற்றும் மனிதர்களை தாக்குவது அவ்வபோது நடைபெறுகிறது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் வசித்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த மார்ச் 30 ஆம் தேதி உதகை, எல்லநள்ளி அருகே உள்ள கிராமத்தின் வீட்டில் கரடி ஒன்று உலா வந்துள்ளது. இது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.