கடலூர்:கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், கள்ளச்சாராயம் அருந்திய சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றனர்.
இந்த நிலையில், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க்கின் அதிரடி உத்தரவின் அடிப்படையில் வடக்கு மண்டல மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களிலும் போலீசார் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அந்த வகையில், கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றம் சுமத்தப்பட்டவர்களைக் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு அவர்களை சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கள்ளச்சாராயம் விற்பனை செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வாழும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்கை முடக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல் துறையால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அந்த உத்தரவின் அடிப்படையில், வடக்கு மண்டலத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் 21 நபர்களின் வங்கிக் கணக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 56 நபர்களினுடைய வங்கிக் கணக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 12 நபர்களின் வங்கிக் கணக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 98 நபர்களின் வங்கிக் கணக்கும் முடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 13 நபர்களின் வங்கிக் கணக்கும், கடலூர் மாவட்டத்தில் 71 நபர்களின் வங்கிக் கணக்கும், வேலூர் மாவட்டத்தில் 33 நபர்களின் வங்கிக் கணக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 44 நபர்களின் வங்கிக் கணக்கும் முடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாது, திருப்பத்தூர் மாவட்டத்தில் 41 நபர்களின் வங்கிக் கணக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 77 நபர்களின் வங்கிக் கணக்கும் என தமிழகத்தின் வடக்கு மண்டலத்தில் மொத்தமாக 466 நபர்களின் வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையின் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:அக்டோபரில் அமலுக்கு வரும் காலி மதுபாட்டில் கலெக்ஷன்.. "10 வருஷமா ஏன் நீங்க யோசிக்கல" - ஈபிஎஸ்-க்கு அமைச்சர் முத்துசாமி கேள்வி