தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயற்சி.. சென்னையில் பிடிபட்ட வங்கதேச இளைஞர்! - FAKE PASSPORT ISSUE - FAKE PASSPORT ISSUE

Bangladesh Youth in Fake Passport issue: வங்கதேசத்தில் இருந்து சென்னை வழியாக போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவிற்கு செல்ல முயன்ற வங்கதேச இளைஞர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை விமான நிலையம் (கோப்புப்படம்)
சென்னை விமான நிலையம் (கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 9:29 AM IST

சென்னை: சென்னையிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் பார்டிக் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் (மே 26) அதிகாலை சென்னை சர்வதேச முனையத்திலிருந்து புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது அவ்விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா முகவரியில் பிளாஸ் டாலி(31) என்ற பெயரில் இந்திய பாஸ்போர்ட்டுடன் ஆண் பயணி ஒருவர் மலேசியா செல்ல வந்தார். ஆனால், குடியுரிமை அதிகாரிகளுக்கு அந்த பயணி மீது லேசாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த சந்தேகத்தின் அடிப்படையில், அவருடைய பாஸ்போர்டின் உண்மைத்தன்மை கண்டறிய தனிச்சிறப்பு கருவியில் பரிசோதித்தனர்.

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு ஊடுருவல்: அப்போது அந்த பாஸ்போர்ட் போலியானது எனத் தெரியவந்தது. இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் பிளாஸ் டாலியின் பயணத்தை ரத்து செய்தனர். அதன் பின்பு பயணியை தனி அறையில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், பயணி வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், இவர் வங்கதேசத்தில் இருந்து இந்திய எல்லைப்பகுதிக்குள் ரகசியமாக ஊடுருவி மேற்குவங்க மாநிலத்தில் சில மாதங்கள் தங்கியிருந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

சென்னையிலிருந்து மலேசியாவிற்கு செல்ல முயற்சி:அதுமட்டுமின்றி, போலி பாஸ்போர்ட் தயார் செய்து கொடுக்கும் கும்பலிடம், பெருமளவு பணம் கொடுத்து, கொல்கத்தா முகவரியில் இந்திய பாஸ்போர்ட் வாங்கியுள்ளார். அதன்பின்பு கொல்கத்தாவில் இருந்து, வங்கதேச இளைஞர் ரயில் மூலம் சென்னை வந்து, அந்த போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி சென்னையிலிருந்து மலேசியா நாட்டிற்குச் செல்ல முயன்றார் என்றும் தெரியவந்தது.

இதையடுத்து சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் அந்த வங்கதேச இளைஞரை கைது செய்தனர். அதோடு, அவரிடம் மத்திய உளவு பிரிவு அதிகாரிகள், தீவிரவாதிகளை கண்காணிக்கும் கியூ பிராஞ்ச் அதிகாரிகள் உள்ளிட்டோர் பல மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து, மேல் நடவடிக்கைக்காக வங்கதேச இளைஞர் சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். தற்போது அவர்களும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

ABOUT THE AUTHOR

...view details