சென்னை:தமிழகத்தில் கழுகுகள் அதிகமாக உள்ள மாவட்டம் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு. இந்த மாவட்டங்களில் உள்ள கால்நடைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் NIMUSLIDE, FLUNIXIN மற்றும் CARPROFEN ஆகிய மருந்துகளை அளிக்கின்றனர். ”இவ்வாறான மருந்துகள் செலுத்தப்பட்ட விலங்குகள் நோய் குணமாகாமல் இறக்கும் நிலையில், அவற்றின் உடல் குப்பையில் எறியப்படும் போது அதை மாமிசத்திற்காக கழுகுகள் உண்ணுகின்றன.
அவ்வாறு மருந்து செலுத்தப்பட்ட கால்நடைகளை உண்டதால் அதிகளவிலான கழுகுகள் உயிரிழந்துள்ளது. எனவே, கழுகுகள் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் அந்த மூன்று மருந்தையும் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோக் கூடாது” என்னும் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரும், வன விலங்குகள் ஆர்வலருமான சூர்யகுமார் மனுவாக தாக்கல் செய்திருந்தார்.
மேலும், அந்த மனுவில் 1980ம் ஆண்டில் இந்தியாவில் 4 கோடி கழுகுகள் இருந்த நிலையில், தற்போது 19,000 கழுகுகள் மட்டுமே இருப்பதாகவும், இயற்கையின் சுகாதாரப் பணியாளர்களான கழுகுகளை பாதுகாக்க, நான்கு மாவட்டங்களிலும் மையங்கள் அமைக்க வேண்டும் எனவும் குறிப்பிடிருந்தார்.