சென்னை: தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, தற்போது 6 மணியளவில் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், 7 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது வாக்குச்சாவடிகளில் அனைத்து அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி பிரமுகர்கள் முன்னிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் பின்னர், சீல் வைக்கப்பட்ட இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரையில், வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டியை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் வைக்கப்படுகிறது.
மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் லயோலா கல்லூரி வளாகத்திலும், தென் சென்னை தொகுதியில் பதிவான வாக்குப் பெட்டிகள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலும் வைக்கப்படுகிறது. பின்னர், தேர்தல் முடிவு வெளியாகும் நாளான ஜூன் 4ஆம் தேதி வரை மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு தெரிவிக்கும் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், சீல் செய்யப்பட்ட வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகள், அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கோமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். மேலும், அரசு சார்பில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டிருந்தாலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்களும் கண்காணித்து வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்! - Tamil Nadu Polling Roundup