சென்னை: கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்று (செப்.12) 16-ஆவது நிதிக்குழு தொடர்பான மாநில நிதியமைச்சர்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து நிதித்துறை செயலர் த.உதயச்சந்திரன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்று, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான நிகர வருவாய் பங்கீடு குறைவாக இருப்பது குறித்து சுட்டிக்காட்டினார்.
நிதிப்பகிர்வு சிக்கல்கள்:கேரளாவில் நடந்த 16-ஆவது நிதிக்குழு கூட்டத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது தொடர்பான அறிக்கையை தமிழ்நாடுஅரசு வெளியிட்டுள்ளது. அதில், "அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டது போல, 15-ஆவது நிதிக்குழு 41 விழுக்காடு பங்கீட்டை பரிந்துரைத்தாலும், முதல் நான்கு ஆண்டுகளில் மொத்த வரி வருவாயில் 31.42 விழுக்காடு மட்டுமே பகிரப்பட்டது. மேலும், செஸ் மற்றும் கூடுதல் வரி விதிப்பால், மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி பங்கீடு குறைந்துள்ளது. இத்துடன், ஒன்றிய அரசின் திட்டங்களில் மாநிலங்களின் பங்கு அதிகரிப்பதும், அவர்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தியுள்ளது"
இதையும் படிங்க: 7 லட்சம் மாணவர்கள்.. 2,763 மையங்கள்.. குரூப் 2 தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி அறிக்கை!
"செஸ் மற்றும் கூடுதல் வரி விதிப்பை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை நிதிக்குழுக்கள் உருவாக்க வேண்டும். மாநிலங்களின் நலன்களைப் பாதுகாக்க இது அவசியமானது. மேலும், ஒன்றிய வரிப் பகிர்வில் 50 விழுக்காடு பங்கை மாநிலங்கள் இணைந்து கோருவது தற்போதைய நிதிநிலையை முறைப்படுத்தும் முக்கியத் தேவையாகும்" என்று அவர் கூறினார்.
சமநிலையான நிதிப்பகிர்வு:அமைச்சர் தனது உரையில், "மாநிலங்களுக்கு வழங்கப்படும் மறுபங்கீட்டு நிதியில் அதிக சமநிலை தேவைப்படுகிறது. இது ஏழை மாநிலங்களுக்கு மட்டுமே ஆதரவு அளிப்பதற்கான முறை அல்ல. அனைத்து மாநிலங்களும் முன்னேறக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். இதன் மூலம், வேகமாக வளர்ச்சி பெறும் மாநிலங்களும் முன்னேற முடியும். பிற மாநிலங்களும் தங்கள் வளர்ச்சியை விரைவுபடுத்திக் கொள்ள முடியும்" என்று கூறினார்.
தமிழ்நாட்டின் இழப்பு:தமிழ்நாட்டில் சிறப்பான செயல்திறன் இருந்தும், நிதிக்குழுக்களால் தொடர்ந்து தண்டிக்கப்பட்டு வருவதாக தங்கம் தென்னரசு வருத்தம் தெரிவித்தார். 9-ஆவது நிதிக்குழுவின் போது 7.93 விழுக்காடாக இருந்த தமிழ்நாட்டின் பங்கு, 15-ஆவது நிதிக்குழுவில் 4.07 விழுக்காடாகக் குறைக்கப்பட்டது.
இதன் விளைவாக, தமிழ்நாடு அரசு ரூ.3.57 லட்சம் கோடி இழப்பை சந்திக்க நேர்ந்தது. இது தமிழ்நாட்டின் நிலுவைக் கடனில் 43 விழுக்காட்டை உருவாக்கியுள்ளது. இதனால், மாநிலத்தின் நிதி நிலை குறைவடைந்ததுடன், அதன் முழுத்திறனை அடைய முடியாத சூழல் உருவாகியுள்ளது" எனப் பேசினார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சில் கவனிக்க வேண்டியவை
- அதிகாரங்களில் ஏற்றத் தாழ்வு - மத்திய, மாநில அரசுகளிடையே பொறுப்புகள், அதிகாரங்கள் வழங்குவதில் உள்ள பிரச்சினைகளால், மாநிலங்களின் வளர்ச்சியில் சவால்கள் ஏற்பட்டுள்ளன.
- வரி பகிர்வில் குறைபாடு - 15ஆவது நிதிக்குழு 41% பகிர்வை பரிந்துரைத்தாலும், மொத்த வருவாயில் 31.42% மட்டுமே மாநிலங்களுக்கு பகிரப்பட்டுள்ளது. செஸ் மற்றும் கூடுதல் வரிகள் காரணமாக மத்திய வரிப் பகிர்வில் குறைவு ஏற்பட்டுள்ளது.
- மாநிலங்களின் நிதி இடைநிலை குறைவு - மத்திய நிதி திட்டங்களில் மாநிலங்களின் பங்குதான் அதிகரித்துள்ளது. இதனால் மாநிலங்களுக்கு இரண்டு பக்கமும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.
- வரிப்பகிர்வில் 50% கோரிக்கை - மாநிலங்களுக்கு மத்திய வரிகளில் 50% பகிர்வு வழங்க வேண்டும் என்பது அவசியமான கோரிக்கையாகும்.
- தமிழ்நாட்டிற்கு இழப்பு - மாநிலத்தில் நல்ல செயல்திறன் இருந்தபோதிலும், நிதிக்குழுக்களில் தொடர்ந்து பங்கு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.3.57 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
- சமநிலை - குறைந்த வளர்ச்சியுள்ள மாநிலங்களுக்கு அதிக நிவர்த்தி வழங்குவது, வேகமாக வளர்கின்ற மாநிலங்களுக்கு வளங்களை குறைத்தது, இந்தியா முழுவதும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறைந்த வளர்ச்சியுள்ள மாநிலங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பாணியால் எதிர்பார்த்த வெற்றியை ஒன்றிய அரசு எட்டவில்லை.