மதுரை: மதுரை திருமலை நாயக்கர் கல்லூரியில் தமிழ்நாடு வரலாற்று பேரவையின் 31ஆம் ஆண்டு கருத்தரங்கு நடைபெற்றது. செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற்ற இக்கருத்தரங்கில் பல்வேறு அறிஞர்கள் தங்களது கட்டுரைகளை சமர்ப்பித்தனர். அதன் நிறைவு விழாவில் சிந்துவெளி ஆய்வாளரும் இந்திய ஆட்சிப் பணியின் முன்னாள் அலுவலருமான பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "தமிழக தொல்லியல் ஆய்வுகளுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி வேண்டும் என்று கோரிக்கை வைப்பதை விட, அமர்நாத் ராமகிருஷ்ணா கீழடியில் மேற்கொண்ட இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை முதலில் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டும்.
சத்தியமூர்த்தியின் பங்களிப்பு: ஆதிச்சநல்லூரில் கடந்த 1906ஆம் ஆண்டு அலெக்சாண்டர் ரீயால் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்குப் பிறகு கடந்த 2004ஆம் ஆண்டு தொல்லியல் கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தியால் அதே இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு அறிக்கை கடந்த 2019ஆம் ஆண்டு தான் உயர்நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையும் கூட சத்தியமூர்த்தியின் பங்களிப்பு குறித்த எந்த தகவலுமின்றி வெளியானது வேதனைக்குரியது.
இந்த சூழலில், வரலாறு என்பது என்ன என்பது குறித்த ஒரு புரிதல் நமக்கு வேண்டும். நம்முடைய புரிதலின்படி வரலாறு என்பது எழுதப்பட்டது. இவையெல்லாம் வரலாற்று காலம், பெருங்கற்காலம், கற்காலம் என்றெல்லாம் வகைப்படுத்தப்படுகிறது. நீண்ட நெடிய மனித வரலாறு என்ற நாடகத்தின் கடைசி அங்கம் தான் வரலாறு என்பது.
இந்த உலகத்தில் உள்ள எழுத்து உள்ள மொழிகளையும், எழுத்து இல்லா மொழிகளையும் கணக்கிட்டுப் பார்த்தால் எழுத்து இல்லாத மொழிகள்தான் அதிகம். அப்படி என்றால் அந்த மொழி பேசுகின்ற மக்களுக்கு வரலாறு இல்லை என்று அர்த்தமாகி விடாது.
எது வரலாறு: ஆகையால் வரலாறு என்பது, யார் அதை எழுதினார்கள் என்பதைப் பொறுத்தது. வரலாறு என்பது கட்டமைக்கப்படுவது. ஒரு மன்னர் தன்னை பற்றி தவறாக எழுதி வைத்து விட்டு சென்றார் என்ற வரலாறு எங்கேயும் உண்டா? எந்த செப்பேடுகளிலும் ஓலைகளிலும் மன்னர்களுடைய மற்றொரு பக்கமோ அல்லது அவர்களின் பலவீனங்களோ எழுதப்பட்டதே இல்லை. சிங்கத்தின் வரலாறை வேட்டைக்காரன் எழுதினால் வேட்டைக்காரனின் பார்வையில் தான் அந்த வரலாறு இருக்கும் என்பது ஒரு ஆப்பிரிக்க பழமொழி.