ஈரோடு: ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி பிரேமா. மாற்றுத்திறனாளியான இவர் ஈரோடு, ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். 3 வயது முதல் போலியோவால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியான இவர், தினந்தோறும் வீட்டில் இருந்து 2.கி.மீ தூரம் நடந்து சென்று பேருந்து மூலம் வேலைக்குச் சென்று வருகிறார்.
மேலும், அரசு சமூக நலத்துறையில் கடந்த 8 வருடங்களாக மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம் கேட்டு விண்ணப்பம் செய்த நிலையில் நான்குமுறை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனால் வேலைக்குச் செல்வதில் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஈரோட்டில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தனியார் ஹோட்டலில் தங்கி இருந்த நடிகர் சின்னத்திரை புகழ் பாலாவை உணர்வுகள் அமைப்பு மூலம் தொடர்பு கொண்டு வாகனம் கேட்டு கோரிக்கை மனு அளித்தார்.
இதையடுத்து, அப்பெண்ணின் மனுவை பெற்றுக் கொண்ட பாலா நிகழ்ச்சிக்குச் சென்று விட்டார். பின்னர், அப்பெண்ணும் வீட்டிற்குச் சென்று விட்டார். இதற்கிடையில், நிகழ்ச்சி முடிவடைவதற்குள் நடிகர் பாலா உணர்வுகள் அமைப்பினரிடம் ரூ.50 ஆயிரம் நிதி கொடுத்து, மாற்றுத்திறனாளி வாகனத்தை வாங்கி வீட்டிற்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினார்.