சென்னை: பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தபோது, நான்கு பேர் தனியார் உணவு டெலிவரி செய்யும் ஆடையை அணிந்து வந்து ஆம்ஸ்ட்ராங்கிடம் பேச்சு கொடுத்துள்ளனர். அப்போது அங்கு பட்டாக் கத்தியுடன் வந்த இருவரும், ஏற்கனவே இருந்த நான்கு பேரும் சேர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்த அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது, ஆறு பேர் கொண்ட கும்பல் தங்களது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு, கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், எட்டு தனிப்படைகள் அமைத்து தப்பிச் சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். தனியார் உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள் போல் ஆடை அணிந்து, ஒரு கட்சியின் மாநிலத் தலைவரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் சென்னையையே உலுக்கி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த சம்பவம் அறிந்து அவரது கட்சியினர் ஆம்ஸ்ட்ராங்கின் வீடு உள்ள பகுதியில் குவிந்து வருகின்றனர். அதேபோல், பெரம்பூர் பகுதியில் உள்ள முக்கியமான சாலைகளை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மறியலில் ஈடுபட்ட ஆதரவாளர்கள், இந்த கொலைச் சம்பபத்துக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும், தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் கோஷம் எழுப்பி வருகின்றனர்.