தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அய்யா வைகுண்டரின் 192 வது அவதார தினம்; செண்டை மேளம் நடனத்துடன் பேரணியாக சென்று வழிபாடு - swamithoppu

Ayya Vaikundar Avathara Thinam:அய்யா வைகுண்டரின் 192 வது அவதார தின விழாவையொட்டி, நாகர்கோவிலில் இருந்து தலைமை பதி சாமிதோப்பிற்கு அய்யா வழி பக்தர்கள் பேரணியாக சென்றனர்.

Ayya Vaikundar Avathara Thinam
அய்யா வைகுண்டரின் 192 வது அவதார தினம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 3, 2024, 12:40 PM IST

அய்யா வைகுண்டரின் 192 வது அவதார தினம்

கன்னியாகுமரி:அய்யா வைகுண்டரின் 192 வது அவதார தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து அய்யா வைகுண்டரின் தலைமை பதி அமைந்துள்ள சாமி தோப்பிற்கு அய்யா வழி பக்தர்களின் பேரணி மற்றும் வாகன பவனி இன்று (மார்ச் 3) நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அய்யா வைகுண்டர் வரலாறு: கடலுக்குள் இருந்து திருச்செந்தூர் கடற்கரைக்கு வந்த 'அய்யா வைகுண்டர்'(Ayya Vaikundar), அங்கிருந்து தவம் செய்ய குமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்புக்கு வந்துள்ளார். இவர் அவதாரம் எடுத்து வந்த காலத்தில், அடக்குமுறைகள் அதிகமாக இருந்து வந்துள்ளது. கீழ் சாதி என்று முத்திரை குத்தப்பட்டவர்கள், முழங்காலுக்குக் கீழ் வேட்டி அணியக்கூடாது, தலைப்பாகை அணியக்கூடாது. பெண்கள் மேலாடை அணியக்கூடாது என பலவிதமான கட்டுப்பாடுகள் அப்போதைய அரசாட்சியில் இருந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் சாமி தோப்புக்கு வந்த அய்யா வைகுண்டர் ஆறு வருடங்கள் சிவனை நோக்கி தவம் இருந்துள்ளார். அய்யா வைகுண்டரை அனைத்து தரப்பு மக்களும் தேடிவந்து பார்த்து ஆசீர்வாதம் பெற்றனர். தன்னை நாடிவந்த பக்தர்களின் மனதில் ஒற்றுமையை இவர் ஏற்படுத்தினார். அனைத்து சாதி மக்களும் ஒரே கிணற்றில் குடிக்கவும், குளிக்கவும் வேண்டும், தன்னை நாடிவரும் பக்தர்களில் ஆண்கள் தலைப்பாகை அணிய வேண்டும் என்றும் பெண்கள் சீலை அணிய வேண்டும் என்றும் போதித்துள்ளார்.

இதனையடுத்து அவர், சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். பல்வேறு இன்னல்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட்டர். அதன் பிறகு சாமி தோப்புக்கு வந்த அய்யா வைகுண்டர், மக்களைத் திரட்டி மக்களின் வழிபாடு முறைகளை மாற்றி புரட்சிகளை ஏற்படுத்தினார். எனவே, பக்தர்கள் அவரை வழிபட்டு வருகின்றனர்.

அய்யா வைகுண்டரின் 192 வது அவதார தினம்:அய்யா வைகுண்டரின் தலைமை பதி கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மாசி 20ஆம் தேதி சாமி தோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில், அய்யா வைகுண்டரின் 192வது அவதார தினவிழா இன்று (மார்ச் 3) கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி, நாகர்கோவில் உள்ள நாகராஜா கோயில் திடலில் இருந்து பிரம்மாண்டமான ஊர்வலம் சாமிதோப்பில் அமைந்துள்ள தலைமை பதிக்கு புறப்பட்டு சென்றது. முன்னதாக, திருவனந்தபுரம் மற்றும் திருச்செந்தூரிலிருந்து வாகன பேரணிகள் நேற்றிரவு நாகராஜா கோயில் திடலுக்கு வந்தடைந்தன. இதே போன்று, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நாகராஜா கோயில் திடலுக்கு வந்த வாகனங்களில் பேரணியாக வந்துள்ளன.

அய்யா வழி பக்தர்கள் பேரணி: சாமிதோப்பு தலைமை பதியில் இருந்து 'வைகுண்ட தீபம்' ஏற்றப்பட்டு அதனைக்கொண்டு சென்று ஆதலவிளை மாமலையில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியோடு அவதார தின விழா தொடங்கியது. விடிய விடிய நாகராஜா கோயில் திடலில் அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு, மாசி மாநாடு நடைபெற்றது. இன்று அதிகாலையில் நாகராஜர் கோயில் திடலிருந்து செண்டை மேளம் முழங்க, கோலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களை ஆடிப்பாடி அய்யா வழி பக்தர்கள் பேரணியாக புறப்பட்டனர்.

சந்தன குடங்கள், முத்துக் குடைகள் ஏந்தியபடி பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் இதில் கலந்துகொண்டனர். அய்யா வழி பக்தர்களின் பேரணி சுசீந்திரம், வழுக்கம்பாறை, வடக்கு தாமரை குளம் வழியாக தலைமை பதி அமைந்துள்ள சாமிதோப்பிற்கு சென்றடைய உள்ளது. பகல் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பக்தர்கள் தலைமை பதியில் வந்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடுவர்.

பாதுகாப்பு பணிகள்: இந்த பேரணி காரணமாக நாகர்கோவில் இருந்து கன்னியாகுமரி மார்கமாக செல்லும் வாகன போக்குவரத்து அனைத்தும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. அவதார தின விழாவில் இந்த அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல்துறை சார்பில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அய்யா வைகுண்டரின் 192 வது அவதார தினத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி, தனது x தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “விஷ்ணு பகவானின் அவதாரமான அய்யா வைகுண்டரின் 192வது பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றவும், சமூகப் பாகுபாடுகளை ஒழிக்கவும் தோன்றியவர் அய்யா வைகுண்டர். ஞானம் மற்றும் ஆன்மிகத்தின் ஊற்றாகவும் சனாதன தர்மத்தின் நியதியாகவும் விளங்கும் அவரது அகிலத்திரட்டு அம்மானை புத்தகம் மனிதகுலத்தை எக்காலத்திற்கும் வழிநடத்தும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:2024 நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்கு வரப்போவதில்லை - வருவாய்த்துறை அலுவலர்கள் திட்டவட்டம்

ABOUT THE AUTHOR

...view details