சென்னை:ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், வளர்புரம் ஊராட்சித் தலைவரும், பா.ஜ.க பட்டியல் அணி பிரிவு மாநிலப் பொருளாளருமான சங்கர் கடந்தாண்டு ஏப்ரல் 27ல் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் வெடிகுண்டு வீசி வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி கவுன்சிலர் சாந்தகுமார் (30) உள்ளிட்ட 7 பேரை, நசரத்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி செவ்வாப்பேட்டையில் உள்ள நண்பர் வீட்டுக்கு சாந்த குமார் சென்ற போது, நசரத்பேட்டை போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். அந்த விசாரணையில், செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் சாந்தகுமாரை தாக்கியதில் அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ஆவடி காவல் ஆணையர் சங்கர், செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய பழைய குற்றவாளியான சாந்தகுமார் (30) என்பவர், மற்றொரு பழைய வழக்கான சங்கர் கொலையில் முக்கிய குற்றவாளி ஆவார். கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி புட்லூர் பகுதியில் பதுங்கி இருந்த சாந்தகுமாரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் கத்திகள் மற்றும் கைத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.
அவரிடம் நடத்திய விசாரணையில், மற்றொரு குற்றச் செயலுக்குத் திட்டம் தீட்டியது தெரிந்தது. இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையின் போது, சாந்தகுமார் நெஞ்சு வலிப்பதாகக் கூறினார். இதையடுத்து, சாந்தகுமார் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவப் பரிசோதனையில், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.